ஐசிசியின் உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, பாகிஸ்தான் சிறப்பு குழுவை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு குழு:
நடப்பாண்டு இறுதியியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்குபெற உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், நாட்டின் 10 வெவ்வேறு நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு சிறப்பு குழுவை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைவருக்கான தேர்தல்:
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “காலியாக உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல், பக்ரித் பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு நடைபெறும். புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை பாகிஸ்தான் அரசு வழங்கும் எனவும், அதைதொடர்ந்து உள்துறை மற்றும் வெளியுறவுத்துறையின் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு குழு இந்தியாவிற்கு அனுப்பப்படும்” என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு குழு என்ன செய்யும்?
அவ்வாறு இந்தியா வரும் குழு “பாகிஸ்தான் அணி விளையாட உள்ள மைதானங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், அவர்கள் தங்கும் அறைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும். அந்த அணி விளையாட உள்ள சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளது” என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அரசிடம் அந்நாட்டு கிரிக்கெட் சம்மேளனம் அனுமதி கோருவதும், அரசு சார்பில் பாதுகாப்பு குழு இந்தியாவிற்கு அனுப்பப்படுவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருப்பின், அந்த குழுவானது பிசிசிஐ மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் புகார் தெரிவிக்கும். அதன்மூலம் குறைபாடுகள் சரி செய்யப்படும்.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
பாகிஸ்தானின் போட்டி விவரங்கள்:
இந்த தொடரில், ஐதராபாத்தில் அக்டோபர் 6ம் தேதி பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லீக் போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி, அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.