இந்தியாவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் நேற்று முன் தினம் ஆர்சிபி வெற்றியை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக் 2024ல் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 






ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு இஸ்லாமாபாத் அணிக்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பட்டத்தை வென்ற அணிக்கு ஐபிஎல்லை விட பல மடங்கு குறைவான பரிசுத் தொகைதான் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதையடுத்து, இன்று இரண்டு லீக்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம். 


பாகிஸ்தான் சூப்பர் லீக் எப்போது ஐபிஎல் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இரு லீக்கின் பரிசுத் தொகையை பொறுத்தவரை பெரிய வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெற்றி பெற்ற அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல் 2023ல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இரு லீக் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் பரிசுத் தொகையில் சுமார் 7 மடங்கு வித்தியாசம் உள்ளது. 


அதேசமயம், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்த முல்தான் சுல்தான் அணிக்கு சுமார் 1.4 கோடி இந்திய ரூபாயும், ஐபிஎல் 2023ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.5 கோடியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இரண்டு லீக்குகளின் பரிசுத் தொகையிலும் சுமார் 9 மடங்கு வித்தியாசம் இருக்கிறது. பிஎஸ்எல் பட்டத்தை வெல்லும் அணிகளை விட ஐபிஎல்லில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணிக்கு ரூ.7 கோடியும், நான்காம் நம்பர் அணிக்கு ரூ.6.5 கோடி கொடுக்கப்பட்டது. 


மகளிர் பிரீமியர் லீக்கை விட பிஎஸ்எல் பரிசுத் தொகை குறைவு:


இந்தியாவில் விளையாடிய மகளிர் பிரீமியர் லீக்கின் பரிசுத் தொகை, அதாவது பெண்கள் ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் பரிசுத் தொகையை விடவும் அதிகம். இம்முறை (2024), மகளிர் ஐபிஎல் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி வழங்கப்பட்டது. அதாவது, மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு வழங்கப்படும் பணத்தின் மதிப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெற்றி பெறும் அணிக்கு கிட்டத்தட்ட அதே தொகை வழங்கப்படுகிறது. 


 போட்டி சுருக்கம்:


டாஸ் வென்ற முல்தான் சுல்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.