பாகிஸ்தான் அணியின் அனுபவமிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.


பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான வஹாப், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 91 ஒருநாள், 27 டெஸ்ட் மற்றும் 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, மூன்று வடிவங்களிலும் மொத்தமாக 237 விக்கெட்களை வீழ்த்தியிள்ளார். 


வஹாப் தனது கடைசி சர்வதேச போட்டியில் கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பமுடியாத பயணத்திற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள், அணியினர், ரசிகர்கள் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.. 






இப்போது ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன்.” என்று தெரிவித்தார். 


இந்தியாவுக்கு எதிராக அசத்திய வஹாப்:


2011 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் மொஹாலி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போது, ​​அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்திக்க நேரிட்டாலும், வஹாப் ரியாஸ் தனது பந்துவீச்சில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் இவர் ஒரு நாள் போட்டிகளில் 3 அரைசதத்துடன் 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 83 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 


வஹாப் ரியாஸ் செய்த சம்பவம்:


2015 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் பயங்கரமாக சோதித்தார். வஹாப்பின் இந்த ஸ்பெல்லில் பல ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். வஹாப் முதலில் ஆஸ்திரேலியாவின் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை வெளியேற்ற, அதன் தொடர்ச்சியாக மைக்கேல் கிளார்க்கை அவுட்டாகினார். 






தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் செய்ய வந்த ஷேன் வாட்சன் மீது வஹாப் ரியாஸ் பவுன்சர் மழை பொழிந்து, ஸ்லெட்ஜிங் செய்தார். அடுத்ததாக, ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 


வஹாப்பின் இந்த பந்துவீச்சானது ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.