ஆசிய கோப்பை 2023 இன் மூன்றாவது சூப்பர் ஃபோர் ஆட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நாளை  நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கை மைதானமான கொழும்பில் தொடங்குகிறது.


இந்தியா - பாகிஸ்தான்:


இந்த போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்படுமேயானால் ரிசர்வ் நாளில் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சூப்பர் ஃபோரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஞாயிற்றுக்கிழமை (நாளை) கொழும்பில் மழை பெய்யலாம். இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரு நாள் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 வீதமாக உள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வெப்பநிலை குறையலாம். சிறிய மழையுடன் நாள் தொடங்கி, மிதமான மழை தற்போது பெய்து வருவதாக தெரிகிறது. அதன்படி, தற்போது மேகங்கள் மறையும் என்ற நம்பிக்கை இல்லை. போட்டியின் போது பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரிசர்வ் டே:


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக இம்முறை ரிசர்வ் டே கடைபிடிக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்த முடியாவிட்டால், அது திங்கட்கிழமை (செப்டம்பர் 11) நடைபெறும். ஞாயிறு டிக்கெட்டுகளை திங்கட்கிழமையும் பயன்படுத்த முடியும் என்பது ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது டிக்கெட் வேஸ்டாகாது. 


சூப்பர் ஃபோரில் இந்தியா மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டிக்கு அடுத்து இலங்கைக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா - வங்கதேசம் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும். சூப்பர் ஃபோர் போட்டிகளுக்குப் பிறகு இறுதிப் போட்டி நடைபெறும். இறுதிப் போட்டி கொழும்பில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. 




பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கணிக்கப்பட்ட லெவன் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் , விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா