ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்:


1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ல் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி என்ற இடத்தில் பிறந்தார் ஷோயப் அக்தர். உலக கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை எட்டிய முதல் பந்துவீச்சாளர் அக்தர் தான். அவர் இந்த சாதனையை இரண்டு முறை நிகழ்த்தி காட்டி உள்ளார். மேலும் உலகத்தின் அதிவேகமான பந்தை மணிக்கு 161.03 கிமீ வேகத்தில் வீசி இன்று வரை யாராலும் உடைக்க முடியாமல் இருக்கும் சாதனையை நிகழ்த்தியவரும் ஷோயப் அக்தர் தான்.


ஷோயப் அக்தர் தனது முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தன்னுடைய சொந்த ஊரான ராவல்பிண்டியில் தொடங்கினார். 1999ஆம் வருடம் அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை ஆசியா டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


ஷோயப் அக்தர் தனது 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


சாதனைகள்:



  • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த டெஸ்ட் பவுலிங் ரெக்கார்ட் 6விக்கெட்டுகள்/11ரன்கள் ( 6/11 

  • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சிறந்த ஒருநாள் பவுலிங் 6விக்கெட்டுகள்/16ரன்கள் ( 6/16 )

  • கேப்டவுனில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 10வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய 11வது பேட்ஸ்மேன் அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள் 43 ரன்களை அடித்துள்ளார்.

  • ஒரு நாள் உலக வரலாற்றில் அதிவேகமான 200 விக்கெட்டுகளை வெறும் 130 போட்டிகளில் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 

  • ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை எட்டிய முதல் பந்துவீச்சாளர்.

  • ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை இரண்டு முறை எட்டிய முதல் பந்துவீச்சாளர்.

  • ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் என்பதை இரண்டு முறை எட்டியுள்ளார்.

  • உலகின் அதிவேகமான பந்துவீச்சு 161.03 கிமீ/மணி என்னும் முறியடிக்கப்படாத சாதனைக்கு சொந்தக்காரர்.

  • அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் மொத்தமாய் 16 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற ஷோயப் அக்தர் “காண்ட்ரவர்சியலி யுவர்ஸ்” என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார்.


கிரிக்கெட் கடவுளை மிரட்டிய அக்தர்:


கடந்த 2022 ஆம் ஆண்டு 'வாக்னி அண்ட் டஃபர்ஸ் கிரிக்கெட் கிளப் போட்காஸ்ட்' நடைபெற்றது. அப்போது கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டெண்டுல்கரை சந்தித்தது குறித்த அக்தர் பேசினார். அதில்,"நான் பல இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சென்று 'கிரிக்கெட் கடவுளை பார்க்க வேண்டும்' என்று கூறினேன். அவர்கள் சொன்னார்கள்- 'உங்களுக்கு அவரைத் தெரியாதா?' நான் சொன்னேன்- 'இல்லை, நான் அவரைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் நான் அவரை முதல் பந்திலேயே வெளியேற்ற விரும்புகிறேன்'.


நான் அவரிடம் சென்று, அவரைப் பார்த்துவிட்டு, 'சகோதரரே, எனக்கு எதிராக உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை' என்று சொன்னேன்" என்று கூறியிருந்தார். அதேபோல் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டையும் ஒரே பந்தில் வீழ்த்தினார் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் என்பது வரலாறு.