இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பயணத்தில் மிகவும் மோசமான காலம் என்றால் 2021-22 ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டூ பயிற்சியாளர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்; முன்னாள் பயிற்சியாளர்; மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் - ராகுல் டிராவிட். 'The wall' என்ற ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படுபவர். டிராவிட்டை அவுட் செய்து பெவிலியன் திரும்ப எதிரணியினர் மிகவும் சிரமப்படுவர். சிறந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் டிஃபன்ஸ் செய்து நீண்ட நேரம் களத்தில் இருப்பார். ராகுல் டிராவிட் இதுவரை விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். பின்னர் அதே ஆண்டு அவர் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் ஆகும். மேலும் அத்துடன் 10,889 ரன்களை குவித்துள்ளார். 2012-ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய ஏ அணி மற்றும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் இவரது பயிற்சியால் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி கொண்டனர். 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
டிராவிட்டின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் அணி 41 முறை வென்றது. அதேபோல், இந்திய அணி 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரை மட்டும் இழந்து 5 தொடர்களை வென்று 2ஐ டிரா செய்தது. கடந்த 2023ம் ஆண்டு ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே நேரத்தில், ராகுல் டிராவிட்டின் பயிற்சி வாழ்க்கையின் ஒரு பெரிய சாதனை என்னவென்றால், 2024 இல், இந்தியா ரக கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. இப்படியாக ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பு கடந்த மாதத்துடன் முடிந்தது.
பயிற்சியாளராக மோசமான காலம்
ராகுல் டிராவிட் கிரிக்கெட் பயிற்சியாளராக தனது மோசமான காலம் குறித்து மனம் திறந்துள்ளார். 2021-2022 ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. தென்னாப்பிரிக்கா மண்ணில் வெல்வதற்கு சாத்தியம் இருந்தும் அது தவறியது. விராட் கோலிக்கு அது கேப்டனாக கடைசி தொடர். முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், முடிவு வேறொன்றாக இருந்தது.
ராகுல் டிராவிட் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய தொடர் காலம் எனக்கு மிகவும் மோசமான ஒன்று. டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வென்றுவிட்டோம். அப்போது,தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்தத் தொடரில் வென்றால் அது வரலாற்று நிகழ்வு. பெரிய வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அப்போது இடம்பெறவில்லை. ரோஹித் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாமல்போனது. தென்னாப்பிரிக்க அணி நன்றாக விளையாடினர். நாங்களும் நல்ல ஸ்கோர் எடுக்க முயன்றோம். ஆனால், தொடரில் வென்றி பெறவில்லை. அதுவே என் பயிற்சிகாலத்தில் மோசமாக காலம்.” என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.