உலகின் தவிர்க்க முடியாத கிரிக்கெட் அணிகளில் ஒன்று பாகிஸ்தான். தொடர் சறுக்கலுக்கு பிறகு பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் நல்ல வளர்ச்சி அடைந்தது. கடந்த உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார்.


பாகிஸ்தான் பயிற்சியாளர்:


இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு வேறு, வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், ஷாகின் அப்ரிடியிடம் ஒப்படைக்கப்பட்ட டி20 கேப்டன்சியும் பறிக்கப்பட்டு, மீண்டும் பாபர் அசாமிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது புதிய பயிற்சியாளரை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது.


கேரி கிரிஸ்டன்:


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி தலைமையில் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிரிஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.


பெரும்பாலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டவே தேர்வாக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கேரி கிரிஸ்டன் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். அந்த வெற்றியை பெற்றுத்தந்த பிறகு கேரி கிரிஸ்டன் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. இவர்கள் இருவர் மட்டுமின்றி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்தவருமான ஆசார் மகமுத் பெயரும் பயிற்சியாளர் பதவிக்கு அடிபட்டு வருகிறது. 


இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று தந்தவர்:


பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கிரிஸ்டனையே பயிற்சியாளராக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 56 வயதான கேரி கிரிஸ்டன் தென்னாப்பிரிக்காவின் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்தவர். அவர் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 21 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 34 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 289 ரன்களும், 185 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 சதங்களுடன் 6 ஆயிரத்து 798 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 275 ரன்களும், ஒருநாள் போட்டியில் 188 ரன்களும் எடுத்துள்ளார்.


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கேரி கிரிஸ்டன் வாரியர்ஸ் என்ற அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். பின்னர், கேப்டவுனில் சொந்த அகாடமியை தொடங்கியவர், 2007ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் இந்தியா 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. தற்போது பல்வேறு நாட்டு லீக் போட்டிகளில் ஆடும் அணிகளுக்கு பயிற்சியாளராக உள்ளார்.