2024 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடரை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக நடத்தும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், சாமியன் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தநிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான 3 நகரங்களின் பெயர்களை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 


சாம்பியன்ஸ் டிராபிக்கு லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களின் ஸ்டேடியங்களை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி லாகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் இந்த மைதானங்களில் நடத்தலாம் என போட்டிகளின் அட்டவணையை அனுப்பியுள்ளோம். ஐசிசி பாதுகாப்பு குழுவினர் இங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. 


அவர்கள் இங்குள்ள ஏற்பாடுகளைப் பார்த்து, ஸ்டேடியம் புதுப்பித்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தோம். தொடர்ந்து, அவர்களுடன் சிறப்பான முறையில் திட்டமிட்டு, சாம்பியன்ஸ் டிராபியை சிறப்பாக நடத்துவதை உறுதி செய்வோம்” என தெரிவித்தார். 


தொடர்ந்து, ஸ்டேடியங்களை தயார் செய்வது குறித்து பேசிய அவர், “இயக்குனர் உள்கட்டமைப்பு, இயக்குநர் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு இயக்குநர் ஆகியோர் அடங்கிய பிசிபியின் மூன்று பேர் கொண்ட குழு ஸ்டேடியங்களை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக வருகின்ற மே 7ம் தேதி சர்வதேச ஏலம் நடைபெறும். உலகெங்கிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் சர்வதேச நிறுவனத்தை அணுகியுள்ளோம். 


கராச்சி தேசிய மைதானத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மே 7 அன்று எங்கள் ஏலம் இறுதி செய்யப்பட்டு உலகின் சிறந்த நிறுவனம் வரும். இது வடிவமைப்பிற்கு உதவும், பின்னர் நாங்கள் உள்ளூர் ஆலோசகருடன் கைகோர்த்து நான்கைந்து மாதங்களில் திட்டத்தை முடிக்க முயற்சிப்போம். நேரம் மிகக் குறைவு என்பதால் இது ஒரு உண்மையான சோதனையாக இருக்கும்” என்று நக்வி கூறினார்.


கராச்சி தேசிய மைதானம், ராவல்பிண்டி மற்றும் லாகூர் கடாபி ஸ்டேடியம் ஆகியவை சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக மேம்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. 


இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?


சாம்பியன்ஸ் டிராபிக்கு முன், தலைப்புச் செய்திகளில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யுமா? என்பது தான் தொடர்ந்து கேள்வியாக வெளிவருகிறது. சமீபத்தில் வெளியான சில ஊடகங்களில், சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததாக கூறப்பட்டது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


இருப்பினும், கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானால் நடத்தப்பட்டது. ஆனால் இந்திய அணி தனது போட்டிகளை ஹைபிரிட் மாடலின் கீழ் இலங்கையில் விளையாடியது. இதுபோன்ற சூழ்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யுமா அல்லது இந்த முறையும் ஹைபிரிட் மாடல் முறையில் விளையாடுமா என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.