T20WC India Squad: டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும், வீரர்கள் யார் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இன்னும் 33 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்கான இந்திய அணிக்கான இறுதி 15 பேரை தேர்வானது,  கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவிக்க உள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக கடந்த சனிக்கிழமை அன்று ஸ்பெயினில் இருந்து டெல்லி வந்த அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து உலகக் கோப்பைக்கான  15 பேர் கொண்ட இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, வெளிநாடுகளில் போட்டி நடைபெறுவதால், காயங்களை கருத்தில் கொண்டு கூடுதலாக 5 பேரை மாற்று வீரர்களாக பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


யார் உள்ளே? யார் வெளியே?


இந்திய அணிக்கான 15 பேரை தேர்வு செய்வதில் இந்தமுறை தேர்வுக் குழுக்கு கூடுதல் குழப்பம் நிலவுகிறது என்பதே உண்மை.  முதலாவதாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், முன்னாள் கேப்டன் கோலி இந்தியாவுக்காக தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் அணியில் விராட் கோலியின் பங்கை வரையறுப்பதில் தேர்வு கமிட்டி பெரும் குழப்பத்தில் உள்ளது. அப்படி நடந்தால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் மாற்று ஓப்பனராக தேர்வு செய்யப்படலாம். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர், இந்திய அணிக்கான விக்கெட் கீப்பருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளனர்.


பாண்ட்யாவிற்கு வாய்ப்பா?


ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 19 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் வெறும் 10 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார்.  142 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாக, இதுவரை 196 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஆனாலும், அவருக்கு சாதகமாக இருப்பது என்னவென்றால், பாண்ட்யாவிற்கு நிகரான மாற்று வீரர் யாரும் தற்போது இல்லை என்பதே. ஷிவம் துபே பேட்டிங்கில் அசத்தி வருகிறார். 8 போட்டிகளில் 22 சிக்சர்களை விளாசியுள்லார். ஆனால், அவர் பந்துவீசவில்லை என்பது பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் இவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


பந்துவீச்சாளர்கள் யார் யார்?


ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான பவுலிங் யூனிட்டில் யார் யார் இடம்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறக் கூடும். அதோடு ஆல்ரவுண்டர் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆக்யோர் சுழற்பந்துவிச்சாளர்களுக்கான முதன்மையான ஆப்ஷனாக உள்ளனர். இதுபோக யுஸ்வேந்திர சாஹலும் அணியில் இருக்கலாம் என கருதப்படுகிறது. 


2024 டி-20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி:


ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன் , சுப்மன் கில்