ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 556 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 148 ரன்களுக்கு சுருண்டது. இதன்பின்னர் ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி 97 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனால் 506 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இன்று தொடங்கியது. இன்றைய நாளின் தொடக்கம் முதல் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 150 ரன்களை கடந்தார். அதன்பின்பு இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்களில் இரட்டை சதத்தை தவிர விட்டார்.
எனினும் இந்த இன்னிங்ஸின் மூலம் அவர் உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது கேப்டான ஒருவர் நான்காவது இன்னிங்ஸில் அடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த மைக்கேல் அதர்டன் 185* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 1995ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்திருந்தார். அதை தற்போது பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்:
பாபர் அசாம்- 196
மைக்கேல் அதர்டன் - 185*
பெவன் காண்டோன் - 176
டான் பிராட்மேன் - 173*
ரிக்கி பாண்டிங்-156
பிரையன் லாரா-154*
விராட் கோலி-141
மேலும் இந்தப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் 425 பந்துகளை சந்தித்து 196 ரன்கள் எடுத்தார். நான்காவது இன்னிங்ஸில் அதிக பந்துகள் சந்தித்த வீரர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சிறப்பான ஆட்டம் மற்றும் முகமது ரிஸ்வானின் சதம் காரணமாக பாகிஸ்தான் இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்