ஐசிசி விருதுகள்:


சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்து வருகிறது. சிறந்த ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் வீரர் மற்றும் வீராங்கனை என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 2022ம் ஆண்டிற்கான விருதுகளை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.






சிறந்த வீரருக்கான விருது:


ஏற்கனவே ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதைதொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் வென்றுள்ளார். இவருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர், 2022ம் ஆண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் அணிக்கான கேப்டனாகாவும் பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


2022ம் ஆண்டில் பாபர் ஆசமின் செயல்பாடு:


கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 44 ஆட்டங்களில் விளையாடிய அவர், 54.15 என்ற சராசரியுடன் 2,598 ரன்களை குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும். 2018 மற்றும் 2019 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி வென்ற நிலையில், கடந்த ஆண்டிற்கான விருதை பாகிஸ்தானை சேர்ந்த பாபர் ஆசம் கைப்பற்றியுள்ளார்.


ஐசிசி அணிகளில் இந்தியர்கள்:


முன்னதாக, ஐசிசியின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர் விருதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். டி-20 தொடருக்கான அணியில் கோலி, ஹர்திக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வாகினர். இதேபோன்று, மகளிர் பிரிவில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் (கேப்டன்) மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இடம்பெற்றனர். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2022ம் ஆண்டிற்கான, வளர்ந்து வரும் வீராங்கனை எனும் விருதையும் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரேணுகா சிங் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.