சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று இந்த ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் அணியை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த ஐசிசி மகளிர் ஒருநாள் அணிக்கு ஹர்மன்பீரித் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


ஐசிசி ஆண்டுதோறும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு சிறந்த வீரர்கள், வீராங்கனைகளை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை அறிவிக்கும்/ 


அந்தவகையில் கடந்த 2022 ம் ஆண்டுக்கான ஆண்கள் டி20, பெண்கள் டி20 மற்றும் ஆண்கள் ஒருநாள், டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்திருந்தது. அந்த வரிசையில், 2022 ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் பெண்களுக்கான அணி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியின் அதிகபட்சமாக மூன்று இந்திய வீராங்கனைகளும், மூன்று தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். 






இந்த ஐசிசி ஒருநாள் மகளிர் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அலிசா ஹீலி விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் மகளிர் அணி:


1. அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா) 2. ஸ்மிருதி மந்தனா (இந்தியா) 3. லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) 4. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து) 5. பெத் மூனி (ஆஸ்திரேலியா) 6. ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) (இந்தியா) 7. அமெலியா கெர் (நியூசிலாந்து) 8. சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) 9. அயபோங்கா காக்கா (தென் ஆப்பிரிக்கா) 10. ரேனுகா சிங் (இந்தியா) 11. ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா)


ஸ்மிருதி மந்தனா:


இந்திய அணிக்காக கடந்த 2022 ம் ஆண்டு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஒரு சதம் மற்றும் ஆறு அரை சதம் எடுத்திருந்தார். நியூசிலாந்து நாட்டில் நடந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ரன்கள் எடுத்திருந்தது மந்தனாவின் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.






ஹர்மன்ப்ரீத் கவுர் (c):


ஐசிசி ஒருநாள் மகளிர் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய அணிக்காக இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்திருந்தார். கடந்த செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஹர்மன் ஆட்டமிழக்காமல் 143* ரன்கள் எடுத்தது இவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். தனது ஆப் ஸ்பின் மூலம் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தார். 


ரேணுகா சிங்:


ரேணுகா சிங் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் அறிமுகமானார். கடந்த ஆண்டு 7 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை அள்ளினார். 


இலங்கைக்கு எதிராக பல்லேகலேவில் 4/28 என்றும், செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.