சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மூன்று வடிவிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளுடன் முத்தரப்பு டி20 போட்டித் தொடரில் ஆடி வருகிறது.


நியூசிலாந்தில் நடைபெற்று வரும் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 53 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 79 ரன்கள் விளாசி பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.




27 வயதான பாபர் அசாம் டி20 போட்டிகளில் இதுவரை 28 அரைசதங்களை விளாசியுள்ளார். 89 டி20 போட்டிகளில் ஆடியுள்ள பாபர் அசாம் 84வது இன்னிங்சில் தனது 28வது அரைசதத்தை விளாசியுள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட்கோலியும் தன்னுடைய 84வது டி20 இன்னிங்சில்தான் 28வது அரைசதத்தை விளாசினார்.


அதேபோல, டி20 போட்டிகளில் சேசிங்கின் போது மட்டும் பாபர் அசாம் விளாசியுள்ள 12வது அரைசதம் இதுவாகும். இதன்மூலம், சேசிங்கின்போது அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் 19 அரைசதங்களுடன் இந்திய கேப்டன் விராட்கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் உள்ளனர்.




பாபர் அசாம் விளாசிய 12 அரைசதங்களில் 11 அரைசதங்களின்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தில் விராட்கோலி உள்ளார். இந்தியாவின் சேசிங்கிற்காக விராட்கோலி விளாசிய 19 அரைசதங்களில் 15 அரைசதங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டேவிட் வார்னர் சேசிங்கின்போது விளாசிய 19 அரைசதங்களில் ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 42 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 23 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 122 ரன்கள் விளாசியுள்ளார். 92 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 22 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 664 ரன்கள் விளாசியுள்ளார். 89 டி20 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 28 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 140 ரன்களுடன் உள்ளார்.