முன்னாள் இந்திய கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான மகேந்திர சிங் தோனி முன்னதாக சென்னைக்கு திடீர் விசிட் அடித்து மகிழ்ந்துள்ளார், இது ஒரு எதிர்பாராத பயணம் என முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தப் படத்தை முன்னதாக தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, " அன்புடன் சென்னையில் தரையிறங்கினார்! எதிர்பாராத இந்த தல தரிசனம் எங்கள் நாளை மாற்றியமைத்துள்ளது. விசில் போடு, யெல்லோவே” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தில், வெள்ளை நிற டி-சர்ட், கருப்பு முகமூடி அணிந்தபடி தோனி சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்படி காணப்படுகிறார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, நேரலையில் தோன்றி முக்கிய செய்தி ஒன்றை அறிவிக்க இருப்பதாக தோனி புயலைக் கிளப்பினார். ஏற்கெனவே சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் தோனி தன் ஓய்வை அறிவிக்கப் போகிறாரோ என நினைத்து ரசிகர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ஆனால் அப்படிப்பட்ட அறிவுப்புகள் எதுவும் அன்றைய தினம் வெளியாகாத நிலையில், அவரது ரசிகர்கள் ஆசுவாசம் அடைந்தனர்,
ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்துகொண்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறும்போது தனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என்று முன்னதாகத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. அதனால்தான் தோனி இன்றுவரை ஓய்வுபெற முடியவில்லை என்றும் மற்றொருபுறம் கூறப்பட்டது.
மேலும், தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையின்படி ஜடேஜா முன்னதாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.