நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், ஏற்கனவே நடைபெற்ற 2 டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று இரவு 3 வது டி 20 போட்டி நடைபெற இருந்தது.
இதையடுத்து, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மூன்று வீரர்கள்: விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹோசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்திய சமீபத்திய சோதனையில் உறுதியாகியுள்ளது. அதேபோல் அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் டாக்டர் அக்ஷய் மான்சிங் ஆகியோர் நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மூன்று வீரர்களும் வரவிருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் எனவும், ஐந்து நபர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்து (10) நாட்கள் தனிமை படுத்துதல் அல்லது எதிர்மறையான பிசிஆர் சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் தனிமையில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 மற்றும் டெவோன் தாமஸ் (1வது T20Iயில் ஏற்பட்ட காயம்) காரணமாக மொத்தம் ஆறு வீரர்கள் சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும்பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் இன்று (வியாழன்) காலை ஆலோசனை மேற்கொண்டு தொடர் தொடர்வதா அல்லது ரத்து செய்யப்படுமா என்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்