ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரிலே நசீம்ஷா பந்தில் குசல் மெண்டிஸ் தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரர் நிசங்கா 8 ரன்களில் அவுட்டானார். நான்காவது நிலையில் களமிறங்கிய குணதிலகா 1 ரன்னில் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
தனஞ்செய டி சில்வா மட்டும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி சில்வாவும் 21 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் தசுன் சனகாவும் 2 ரன்களில் ஷதாப் கான் பந்தில் போல்டானர். 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.
இதையடுத்து, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசரங்கா – பனுகா ராஜபக்சே இலங்கை அணியை மீட்டனர். முதல் பந்திலே பவுண்டரியுடன் தொடங்கிய ஹசரங்கா அதிரடியாக ஆடினார். பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பந்துகளை ஹசரங்கா விளாசினார். இதனால் இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. இலங்கை அணி 116 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய ஹசரங்கா ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இலங்கையின் பனுகா ராஜபக்சே அதிரடி காட்டினார். அவர் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் அளித்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் வீணடித்தனர். கடைசி ஓவரின் இரு பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பனுகா ராஜபக்சே விளாசினார்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை விளாசியது. பனுகா ராஜபக்சே 45 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 71 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கருணரத்னே 1 சிக்ஸருடன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நசீம் ஷா, முகமது ஹஸ்நையின் ஓவர்களில் அதிக ரன்களை இலங்கை வீரர்கள் விளாசினர்.