கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பல்வேறு நாடுகளும் உலககோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. உலககோப்பைக்கான அணியை சமர்ப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலககோப்பைக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காயத்தால் அவதிக்குள்ளாகியுள்ள வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும், ஹர்ஷல் படேலும் முழு உடல் தகுதி அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




உலககோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முக்கியமான பந்துவீச்சாளரும், இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளருமான பும்ரா காயத்தால் ஆடாததால் ஏற்பட்ட பின்விளைவை ஆசிய கோப்பையில் நன்றாக காண முடிந்தது.


மேலும், சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஹர்ஷல் படேல் இல்லாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. இதனால், இந்திய அணி ஆசிய கோப்பையில் பிரதான பந்துவீச்சாளர்களாக மூத்த பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமாருடன் அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கானுடன் களமிறங்கியது.




இந்திய அணி பந்துவீச்சில் எந்தளவு பலவீனமாக இருந்தது என்பதை ஆசிய கோப்பையில் பார்க்க முடிந்தது. இதனால், இவர்கள் இருவரும் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக திரும்ப இருப்பது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.


பும்ரா 30 டெஸ்ட் போட்டிகளில் 128 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பும்ரா உலககோப்பை போட்டித் தொடரில் ஆடிய அனுபவமும் உள்ளவர் என்பதும், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹர்ஷல் படேல் 17 டி20 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல, ஐ.பி.எல். போட்டிகளில் 78 டி20 போட்டிகளில் ஆடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : PAK vs SL Asia Cup Final : ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்...? பழிதீர்க்குமா பாகிஸ்தான்..? பட்டம்சூடுமா இலங்கை..?


மேலும் படிக்க :  HBD Lala Amarnath : இந்தியாவிற்காக முதல் சதம்..! இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் தொடர் வெற்றி..! ஜாம்பவான் அமர்நாத் பிறந்தநாள் இன்று..!