ICC World Cup 2023: PAK vs SA : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தற்போது மிகவும் சுவராஸ்யமான இடத்துக்கு வந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒருசில அணிகள் மிகவும் மோசமான ஆட்டத்தினால் புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் உள்ளது. குறிப்பாக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் மிகவும் பெரிய அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த தோல்விகளால் கிரிக்கெட் ரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது மட்டும் இல்லாமல், தங்களது சொந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளனர். 


இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதிக்கொண்டது. பாகிஸ்தான் அணி தனக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியைப் பெறும். இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி டாஸ் வென்ற் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 10 விக்கெட்டினை இழந்து 270 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷவுத் ஷகில் 52 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஷம்ஷி 4 விக்கெட்டுகளும் மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும்  கோட்ஸீ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 




அதன் பின்னர் 271 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. முதல் ஓவரினை வீசிய இஃப்திகார் முதல் பந்தினை சரியாக வீசவே 5 வைய்டு வீசினார். அதேபோல் இரண்டாவது ஓவரினை வீசிய அஃப்ரிடி பந்தில் டி காக் 4 பவுண்டரிகள் விளாசினார். ஆனால் அதன் பின்னர் டி காக் மற்றும் டெம்பா பவுமா பவர்ப்ளேவிற்குள் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 


அதன் பின்னர் வந்த வன் டெர் டசன் தொடக்கம் முதல் தடுமாறி வந்த நிலையில் தனது விக்கெட்டினை இழக்க, வந்தது முதல் அதிரடி காட்டிய க்ளாசனும் வெளியேறினார். அதன் பின்னர் இணைந்த மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி சிறப்பாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்த லெஃப்ட் - ரைட் காம்பினேசனை பிரிக்க பாபர் தன்னிடம் இருந்த பந்து வீச்சாளர்களை பயன்படுத்திப் பார்த்தும் உடனடி தீர்வு எட்ட முடியவில்லை. 


குறிப்பாக மில்லருக்கு குறிவைத்து பந்து வீச்சாளரை பாபர் பயன்படுத்தினால் அந்த ஓவரை மார்க்ரம் சிதைப்பதும், மார்க்கரமிற்கு குறி வைத்தால் அந்த ஓவரை மில்லர் தனது பாணியில் சிறப்பாக கவனிப்பதுமாக இருந்ததால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. களமிறங்கியது முதல் சவாலான ஆட்டத்தினை ஆடி வந்த டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை போட்டியின் 34வது ஓவரில்  அஃப்ரிடியிடம் இழந்து வெளியேறினார். மில்லரின் விக்கெட்டினை வீழ்த்திய பின்னர் பாகிஸ்தான் வீரர்களிடம் சிறு நம்பிக்கை தெரிந்தது. 





அதன் பின்னர் வந்த மார்கோ யான்சென் ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினாலும், 5 முதல் 6 பந்துகளை எதிர்கொண்ட பின்னர் வந்த பணியினை சிறப்பாக செய்து வெளியேறினார். இவரின் அதிரடியான ஆட்டம் மார்க்ரம் மீது இருந்த அழுத்தத்தினை குறைத்தது. 


மார்க்ரம் சதத்தை நோக்கி முன்னேறி வந்தார். ஆனால் அவர் 91 ரன்களில் தனது விக்கெட்டினை இழக்க, போட்டி பாகிஸ்தான் கைகளுக்கு வந்தது.  இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டினை இழந்து 271 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றுள்ளது.