பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வரும் நியூசிலாந்து அணி அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வந்தது.


விறுவிறுப்பான ஆட்டம்:


விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே கைவசம் வைத்திருந்து ஆட்டத்தை டிரா செய்தது. இதனால், டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை நியூசிலாந்து அணி இழந்தது.




இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் – சவுத் ஷகீல் ஜோடி இணைந்து ஆட்டத்தை மாற்றியது. 85 ரன்களில் சேர்ந்த ஜோடி 203 ரன்களில்தான் பிரிந்தது. விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த சவுத் ஷகீல் 146 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.


சர்ப்ராஸ் அபார சதம்:


அடுத்து வந்த அகா சல்மானும் சர்ப்ராசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். அவர் 40 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நங்கூரம்போல களத்தில் நின்ற சர்ப்ராஸ் அகமது சதமடித்து அசத்தினார். ஹசன் அலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ப்ராஸ் அகமது ஆட்டமிழந்தார். 176 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டம் முடிய 4 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் சர்ப்ராஸ் அவுட்டானதால் மீதமிருந்த 1 விக்கெட்டையும் வீழ்த்தினால் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. 4 ஓவர்களை கடத்தினால் பாகிஸ்தான் போட்டியை டிரா செய்யும் வாய்ப்பு இருந்தது.




இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் எஞ்சிய 4 ஓவர்களையும் நஷீம் ஷா 15 ரன்களுக்கும், அப்ரார் அகமது 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், விறுவிறுப்பான இந்த போட்டியை பாகிஸ்தான் ட்ரா செய்தது.


தொடரும் சோகம்:


பாகிஸ்தான் அணி இந்த போட்டியை டிரா செய்தாலும் பாகிஸ்தான் அணியின் மோசமான பயணம் தொடர்கிறது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி ராவல்பிண்டியில் தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. அதன்பின்னர், சுமார் 2 ஆண்டுகளாக சொந்த மண்ணில் வெற்றி பெறாமல் அவதிப்பட்டு வருகிறது.