இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இறுதி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி இலக்கினை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது. மொத்தம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1 - 1 என சமநிலையில் உள்ளது. 
போட்டியின் தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் பகுதி நேர கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பண்டியா கூறுகையில், "எந்த வகை கிரிக்கெட்டிலும் நோ - பால் வீசுவது குற்றம். மேலும், நான் அர்ஷ்தீப் சிங்கை குறை கூறவில்லை. இளம் பந்து வீச்சாளர்கள் தங்களது அடிப்படை பிழைகளை சரி செய்ய வேண்டும்" என அவர் கூறினார். 


ஒரு கேப்டனாக தனது அணி வீரருக்கு ஊக்கம் அளிக்கும் படியும், தவறை திருத்திக் கொள்ளும் படியும் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தாலும், நேற்றய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணம் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 5 நோ-பால் உள்பட 37 ரன்கள் வாரிக்கொடுத்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் என்றே கூற வேண்டும். 


இலங்கை அணி பேட்டிங் செய்த போது இரண்டாவது ஓவரில் தாக்குதலுக்கு வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்த ஓவரில் மட்டும் மூன்று நோ-பால் பந்துகளை வீசினார். இது பவர்பிளேயில் இலங்கைக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் இரண்டாவது ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார். இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தினை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் வீச, அது நோ-பால் ஆனது. முதல் நோ-பால் பந்து வீசிய பிறகு, அர்ஷ்தீப் அடுத்த பந்தான ஃப்ரீ-ஹிட்டில் ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்தார், அந்த பந்தும் நோபால் ஆக, அடுத்த பந்தும் ஃப்ரீ-ஹிட் ஆனது. அந்த ஃப்ரீ ஹிட் பந்தையும் அர்ஷ்தீப் நோபாலாக வீச, அந்த பந்தை குசல் மெண்டில் சிக்ஸருக்கு விரட்ட ஹர்திக் பாண்டியா அதிர்ந்து போனார். எப்படியாவது அதனை சரி செய்ய ரவுண்ட் த விக்கெட் வந்து வீசி ஒரு வழியாக ஓவரை முடித்தார்.


வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் 2023 ஆம் ஆண்டில் தான் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமாக ஆண்டை ஆரம்பித்தார். இதன் மூலம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப், டி20 போட்டிகளில் 'நோ பால்'களில் ஹாட்ரிக் பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார். மேலும் ஒரு போட்டியில் அதிக நோ-பால் வீசிய இந்திய வீரர் என்ற பெயரையும் பெற்றார். அந்த மூன்று நோ-பால்களுக்கு பிறகும் ஆட்டத்தில் இரண்டு நோ-பால்களை வீசினார்.


அதாவது,போட்டியின் டெத் ஓவர்களில் ஒன்றான 19வது ஓவரினை வீசிய போது, அந்த ஓவரின் 4வது மற்றும் 5வது பந்தினையும் நோ- பாலாக வீச இந்த ஓவரிம் மட்டும் 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் 2 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவரது மோசமான பந்து வீச்சே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.