பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வரை ஒரு நிலையற்ற தன்மையில் தத்தளித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாமல், அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாம், தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக், பந்துவீச்சாளர் பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் என அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 


இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு, பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். 


தலைமை பயிற்சியாளர் யார்..? 


பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனை நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. ஆனாலும், அதிலும் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது. 


பாகிஸ்தான் அணி, விரையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். கேர் கிர்ஸ்டன் ஏன் நியமிக்கப்படவில்லை என எழுந்த கேள்விக்கு ஐபிஎல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. 


ஐபிஎல்தான் காரணமா..? 


தற்போது கேரி கிர்ஸ்டன் ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதன் காரணமாக கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 முடிந்ததும் கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து, 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயார் செய்வார். 






யார் இந்த அசார் மஹ்மூத்..?


அசார் மஹ்மூத் தானே பாகிஸ்தானுக்காக கடந்த 2016 முதல் 2019 வரை அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும், ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி, பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது அனுபவம் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இவருடன், அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், முகமது யூசுப்புக்கு பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பும், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "அசார் மஹ்மூத் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 164 சர்வதேச போட்டிகளில் விளையாடி 162 விக்கெட்டுகள் மற்றும் 2,421 ரன்கள் எடுத்துள்ளார்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அதேசமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலாளராக வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் அசாம் மீண்டும் அணிக்கு பொறுப்பேற்கவுள்ளது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.






பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது காபூலில் ராணுவ உடற்பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளது. இந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.