ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கியது. முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதில் இந்தியா – இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.


அந்தவகையில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணி இன்று நேருக்குநேர் மோதி வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. மிட்செல் 53 ரன்களுடனும், நீஸம் 16 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்களும், நவாஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். 


153 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே சிறப்பான தொடக்கம் தந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தனர். இருவரின் விக்கெட்களை எடுக்க நியூசிலாந்து திணற, அசாம் - ரிஸ்வான் ஜோடி பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர். 


முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 105 ரன்கள் குவித்தது. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் மோசமான பார்மில் இருந்துவந்த பாபர் அசாம் மொத்தமாகவே 39 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தார். இதனால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு வந்தார். 


கருத்துகளை முறியடிக்கும் வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 42 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த சர்வதேச டி20 அரங்கில் தனது 30வது அரைசதம் கடந்து போல்ட் பந்தில் அவுட்டானார். அதை தொடர்ந்து மற்றொரு ஆட்டக்காரரான ரிஸ்வானும் அரைசதம் கடந்து அசத்தினார். 


சிறப்பாக விளையாடி கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தபோது, போல்ட் பந்துவீச்சில் மிட்செல்லிடம் கேட்சானார். அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ், ஷான் மசூத் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 






7 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஹாரிஸ் 30 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து 6 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டி செளதி பந்து வீச வந்தார். முதல் பந்தே வொய்டாக விழ, அடுத்த பந்து 1 ரன் எடுத்து பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின்மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் முதல் இறுதிப்போட்டி அணியாக தகுதிபெற்றது. நாளை நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகிற ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் மோதும்.