அரையிறுதி போட்டியில் இந்தியாவை நாளை சந்திக்க உள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க விடமாட்டேன்,  அதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் பட்லர் கூறியுள்ளார்.


ஜோஸ் பட்லர்


ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இன்று (புதன்கிழமை) நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அணி எப்படி தயாராகி உள்ளது, டேவிட் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சூர்யகுமார் யாதவை எவ்வளவு உயர்வாக மதிப்பிடுகிறார் என்பது குறித்து ஊடகங்களிடம் பேசினார். 



இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வர விடமாட்டோம்


"நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை. எனவே அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்," என்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பட்லர் கூறினார். "இந்தியா மிகவும் வலிமையான அணி. இந்திய அணி மிக நீண்ட காலமாக நிலையாக உள்ளது. இயற்கையாகவே, அவர்களிடம் திறமையின் அளவு, ஆட்டத்தின் ஆழம் ஆகியவை அதிகமாக உள்ளது. அவர்களிடம் அற்புதமான வீரர்கள் உள்ளனர்," என்று பட்லர் மேலும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Rain alert: வங்க கடலில் வானிலை மாறுது..! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! காட்டாறாக பெய்ய போகுது கனமழை!


சூர்யகுமார் யாதவ்


சூர்யகுமார் யாதவ் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் மூன்று அரை சதங்களைப் பதிவு செய்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரைப் பற்றி பேசுகையில், "அவர் மிகவும் நன்றாக விளையாடுகிறார். சுதந்திரமாக ஆடுவதே அவரது மிகப்பெரிய பலமாகத் தெரிகிறது. எளிதாக அனைத்து ஷாட்களையும் கைவரப் பெற்றுள்ளார், அந்த ஷாட்களை சரியாக தேர்ந்தெடுத்து செயல்படுத்துகிறார். உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், விக்கெட்டை எடுப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே போதும். அதற்கான வழியை நாம் தீவிரமாகக் கண்டுபிடிக்க வேண்டும்."என்றார்.



சாஹல் விளையாடாதது குறித்து..


உலகக் கோப்பையில் யுஸ்வேந்திர சாஹல் எந்த ஆட்டத்திலும் இடம்பெறாதது ஆச்சரியமாக இருக்கிறதா என்று கேட்டபோது, ​​பட்லர் கூறியதாவது, "யூசி ஒரு சிறந்த பந்துவீச்சாளர், ஐபிஎல்லில் அவருடன் விளையாடுவதை நான் மிகவும் ரசித்தேன். அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பார். அவர அணியில் சேர்க்கப்பட்டால் எங்களுக்கு சவால்தான் என்பது உறுதி", என்றார்.


காயங்கள் குறித்து


மேலும் மாலன் மற்றும் வூட்டின் காயங்கள் பற்றிப் பேசுகையில், பட்லர் கூறினார், "அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம். முடிந்தவரை அவர்கள் ஆட முயற்சி செய்வோம். மருத்துவக் குழுவை நம்புகிறோம், அந்த இருவரையும் நாங்கள் நம்புகிறோம், எனவே முடிந்தவரை அவர்கள் விளையாடுவதற்கான வேலைகளை செய்வோம்", என்றார். புவனேஷ்வர் குமாரை எதிர்கொள்ளத் தயாராகி வருவது பற்றி பேசுகையில், "எனது சொந்த ஆட்டத்தில் நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நல்ல பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் இருக்கும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நான் எப்பொழுதும் என்னை நன்றாக தயார் செய்கிறேன்", என்றார்.