ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கியது.


முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதில் இந்தியா – இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.


அந்தவகையில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணி இன்று நேருக்குநேர் மோதி வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டேவான் கான்வே களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் பின் ஆலன் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாஹீன் அப்ரிடி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.  டேவான் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்த நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 20 பந்துகளில் 21 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த கான்வே, ஷதாப் கான் கைகளால் ரன் அவுட் ஆனார். 


அதனை தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஸ் வீசிய 8 வது ஓவரில் க்ளென் பிலிப்ஸ் 8 பந்துகளில் 6 ரன்கள் அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்தார்.இதையடுத்து, நியூசிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து தடுமாறியது. 


கேப்டன் வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்த மிட்செல் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க தொடங்கினர். தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்கள் அடித்து ஹாஹீன் வீசிய 17 வது ஓவர் இரண்டாவது பந்தில் க்ளீன் போல்டானார். 






அடுத்து களமிறங்கிய ஜிம்மி நீஸம் தன் பங்கிற்கு சிங்கிள் ரன்களை தட்டிகொடுக்க, மறுபுறம் நங்கூரம் நின்ற மிட்செல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 


20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மிட்செல் 53 ரன்களுடனும், நீஸம் 16 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்களும், நவாஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.