பாகிஸ்தானில் நியூசிலாந்து சுற்றுபயணம்:
2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக, நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் கராச்சி நகரில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. அதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 612 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 21 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 395 பந்துகளில் 200 ரன்களை வில்லியம்சன் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி கடைசி நாளில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி கைவிடப்பட்டு டிரா ஆனது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இங்கிலாந்திடம் படுதோல்வி:
அதேசமயம், அண்மையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தான் அணியை சொந்த நாட்டிலேயே, 3-0 என ஒயிட் வாஷ் செய்தது. இதனால் பெரும் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள், நியூசிலாந்து உடனான போட்டியை காண பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மைதானத்தில் இருக்கைகளும் காலியாக இருந்தன.
ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்:
இந்நிலையில் தான், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 2ம் தேதி கராச்சியில் நடைபெற உள்ளது. முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் மைதானம் ரசிகர்கள் இன்றி காலியாக இருப்பதை தவிர்க்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உரிய அட்டையாள அட்டையுடன் யார் வேண்டுமானாலும் போட்டியை இலவசமாக காண மைதானத்திற்கு வரலாம் எனவும், மைதானத்தின் அனைத்து மாடங்களில் இருந்தும் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மைதானத்திற்குள் துப்பாக்கிகள், பொம்மை துப்பாக்கிகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், சிகரெட், தீப்பெட்டிகள், லைட்டர்கள், கத்திகள் மற்றும் கூர்மையான பொருட்களை கொண்டு வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மைதானத்திற்கு அழைத்து வரவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் முயன்று வருவதாக தகவல் வெளியாகவுள்ளது.