ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேபாள அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. பாகிஸ்தான் - நேபாளம் இடையிலான போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.


அதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்திருந்த ஜமான் கரண் பந்தில் ஆசிஃப்பிடம் கேட்ச் கொடுக்க, 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இமாம் உல் ஹக் ரன் அவுட்டாகி நடையைக் கட்டினார். 


தொடர்ந்து உள்ளே வந்த பாபர் - ரிஸ்வான் கூட்டணி நேபாள பந்துவீச்சாளர்கள் மீது தாக்குதலை தொடுக்க தொடங்கியது. முதலில் மெதுவாக பேட்டிங்கை தொடர்ந்த கூட்டணி 50 ப்ளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த சல்மானும் 5 ரன்களே எடுத்தார். 


பாபர் அசாம் சதம்:


அதன்பிறகு, நேபாள அணியின் கனவு கலைய தொடங்கியது. பாபர் அசாமுடன் இணைந்த இப்திகார் நேபாள பந்துவீச்சாளர்களின் பந்தை தவிடு பொடியாக்கினார். ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பாபர் அசாம் ஒருநாள் வடிவத்தில் தனது 19 வது சதத்தை பூர்த்தி செய்ய, இப்திகாரும் 44 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 


தொடர்ந்து, இருவரின் அதிரடியால் 46 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. அப்போது,  பாபர் அசாம் 144 ரன்களும், இப்திகார் 75 ரன்களும் எடுத்து விளையாடி வருந்தனர். இருவரின் அதிரடி தொடரவே, 48 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 313 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. பாபர் அசாமும் 150 ரன்களை கடந்து இருந்தார்.  


மீதம் இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், 87 ரன்கள் எடுத்திருந்த இப்திகார் 48 ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை ஓடவிட பாபர் - இப்திகார் கூட்டணி 200 ப்ளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடர்ந்து அதே ஓவரில் மற்றொரு பவுண்டையை ஓட விட்டு 67 பந்துகளில் இப்திகார் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார் இப்திகார். 49.4 பந்தில் 151 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பாபர் அசாம் லாமிச்சானே பந்தில் குஷல் புர்டெல்லிடம் கேட்சானார். கடைசி பந்தில் சதாப் கான் ஒரு பவுண்டரியுடன் க்ளீன் போல்டாக, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது.