உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசியுடன் இணைந்து நடத்துகிறது. இந்த தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் நடைபெற்று வருகிறது. 


13வது உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் பந்து வீச முடிவு செய்தார். 


கேப்டன் கோடு போட்டால் நாங்கள் ரோடு போடுவோம் என்பது போல நெதர்லாந்து அணி பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஃபகர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் ஆகியோரது விக்கெட்டை 38 ரன்களுக்குள் கைப்பற்றி அசத்தினர். பேட்டிங் பவர்ப்ளே முடிவதற்கு முன்பாகவே 3 விக்கெட்டுகளை இழந்ததால் பாகிஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 


அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஸ்வான் மற்றும் ஷவ்த் ஷகீல் பாகிஸ்தான் அணியை மெல்ல மெல்ல மீட்டனர். 3 விக்கெட்டுகளை அணி இழந்திருந்தாலும் இருவரும் தங்களுக்கு கிடைந்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். குறிப்பாக ஷவ்த் அதிரடியாக ஆட, ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடினார். இவர்கள் கூட்டணியால் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது மட்டும் இல்லாமல், வலுவான நிலைக்கு முன்னேறியது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை விளாசினர். அதைத் தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் கூட்டணி 115 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த வலுவான கூட்டணியை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டட் கைப்பற்றினார். இவர்கள் கூட்டணி பிரியும்போது அணியின் ஸ்கோர் 158 ஆக இருந்தது. 


அதன் பின்னர் நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் லீதி வீசிய 32வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரிஸ்வானும் கடைசி பந்தில் இஃப்திகார் அகமது ஆகியோர் தங்களது விக்கெட்டினை இழக்க பாகிஸ்தான் அணி மீண்டும் சரிவினைச் சந்தித்தது. அதன் பின்னர் கைகோர்த்த முகமது நவாஸ் ஷ்தப் கான் கூட்டணி பாகிஸ்தான் அணியை 250 ரன்களை எட்ட வைத்தனர். 


போட்டியின் 44 ஓவரை வீசிய லீதி அந்த ஓவரின் 4வது மற்றும் 5வது பந்தில் ஷதப் கான்  மற்றும் அசன் அலி ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். 6வது பந்தினை எதிர்கொண்ட அஃப்ரிடி அதனை எளிதாக தடுக்கவே லீதியின் ஹாட்ரிக் கனவு சிதைந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில்  10 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து தரப்பில் லீதி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நெதர்லாந்து அணி தரப்பில் மொத்தம் 8 பேர் பந்து வீசினர்.