ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறிய நிலையில், இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணி மோதியது. 


பாகிஸ்தான் சொதப்பல்:


இதில், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று காலையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்க முன்னேறியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் இடையே 2வது அரையிறுதி போட்டி நடைபெற்றது.




ஹாங்சோவ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஓமர் 24 ரன்களில் ரன் அவுட்டானார். தொடக்க வீரர் மிர்சா 4 ரன்களில் அவுட்டாக ரோகைல்  - ஓமர் யூசுப் நிதானமாக ஆடினர். அதிரடியாக ஆட முயற்சித்த ரோகைல் நசீர் 10 ரன்களில் அவுட்டானார்.


ஆப்கானிஸ்தான் அபாரம்:


பின்னர், ஹைதர் அலி 2 ரன்களில் அவுட்டாக, கேப்டன் காசிம் 9 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை ரன்னில் அவுட்டாக அராஃபத் – ஆமீர் ஜோடியின் ஆட்டத்தால் பாகிஸ்தான் 100 ரன்களை கடந்தது. அராஃபத் 13 ரன்களிலும், ஆமீர் 14 ரன்களிலும் அவுட்டாக 18 ஓவர்களிலே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.




ஆப்கானிஸ்தான்  வீரர் பரீத் அகமது 3 விக்கெட்டுகளையும், அகமது மற்றும் ஜாகீர்கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்பதீன் மற்றும் கரீம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.


தொடக்க வீரர் அடல் 5 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் 9 ரன்களிலும் அவுட்டாக அடுத்து வந்த கமல் டக் அவுட்டானர். பின்னர் ஜோடி சேர்ந்த நூர் அலி – அப்சார் ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய நூர் அலி 39 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.


இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்:


கடைசியில் கேப்டன் குல்பதீன் நயிப் அதிரடியாக ஆடினார். அவர் 19 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். ஆப்கன் 17.5 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் பிரிவுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று காத்திருந்த அந்த நாட்டு ரசிகர்கள் இந்த முடிவால் சோகம் அடைந்தனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளில் தங்கம் வெல்லப்போவது யார்? என்பது வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தங்கம் வெல்லும். தோல்வி அடையும் அணிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும்.


மேலும் படிக்க: Asian Games: ஆசிய விளையாட்டு - அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி ஃபைனலுக்கு முன்னேற்றம்


மேலும் படிக்க: ODI World Cup Records: உலகக் கோப்பையில் இங்கிலாந்தை பழிதீர்த்த நியூசிலாந்து - புதிய சாதனைகள் படைத்து அதகளம்