அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் கடைசி அணியாக வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகளுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 


பாகிஸ்தான் - அயர்லாந்து மோதல்:


இந்நிலையில் இன்று (ஜூன் 16) நடைபெற்ற 36 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே முன்னரே எலிமினேட் ஆகிய சூழலில் தான் இந்த போட்டி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெற்றது. 


டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கியது அயர்லாந்து அணி. அந்த அணியி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களம் இறங்கினார்கள். ஆனால் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.


அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க அதிகபட்சமாக கரேத் டெலானி 31 ரன்களை எடுத்தார். அதேபோல், ஜார்ஜ் டோக்ரெல் 11, மார்க் அடேர் 15, ஜோசுவா லிட்டில் 22 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.


போராடி ஜெயித்த பாகிஸ்தான் அணி:


பாகிஸ்தான் அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் களம் இறங்கினார்கள். இருவரும் தலா 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் களம் இறங்கினர்.


நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க மறுபுறம் ஃபகார் ஜமான் 5 ரன்களிலும், உஸ்மான் கான் 2 ரன்களில் வெளியேற ஷதாப் கான் டக் அவுட் ஆகி நடையைக்கட்டினார். பாகிஸ்தான் அணிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார் அப்பாஸ் அப்ரிடி.


10 ஓவர்கள் முடிவில் 62 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. ஆனால் பாபர் அசாம் மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஜோடி தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறாக 18.5 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்ற பாபர் அசாம் 32 ரன்களும் அப்ரிடி 13 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.