பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டியில் முதல் டெஸ்டிலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 


கராச்சியில் தற்போது 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார்.  இங்கிலாந்து அணி 81.4 ஓவர்கள் முடிவில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 


50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான ஷாபிக் 26 ரன்களும், ஷான் மசூத் 24 ரன்களில் நடையைகட்டினர். இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறும் அசார் அலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமு, ஹாகிலும் அரைசதமும் அடித்து வெளியேற, பின்வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டை அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத்திடம் விட்டுகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்களில் 216 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 






இங்கிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத் 5 விக்கெட்களும், ஜேக் லீச் 3 விக்கெட்களும் எடுத்தனர்.  இந்தநிலையில், 18 வயது 126 நாட்களில் ரெஹான் தனது முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியதன்மூலம் தனது அறிமுகத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் .


இதற்கு முன்னதாக கடந்த 2011 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தற்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ​​18 வயது 193 நாட்களில் 79 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது பேட் கம்மின்ஸின் சாதனையை ரெஹான் முறியடித்துள்ளார். 


தற்போது இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.