நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் ஆகியோர் தங்கள் பணிச்சுமை காரணமாக, அடுத்த மாதம் தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 


ஒருநாள் தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்திய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் போட்டிக்கான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. சமீபத்தில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய வில்லியம்சன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தலைமை தாங்க இருந்தநிலையில், டாம் லாதம் ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்க இருக்கிறார். 


நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கும், ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவிற்கும் எதிரான ஒருநாள் தொடருக்கான இரண்டு ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது.


அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பி ஓய்வெடுக்க இருக்கிறார். பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான நியூசிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறார். 






இதையடுத்து, வில்லியம்சன் மற்றும் பயிற்சியாளர் ஸ்டெட் இல்லாத நிலையில், டாம் லாதம் கேப்டனாக செயல்பட இருக்கிறார். அதே நேரத்தில் பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். 


தொடர்ந்து இந்தியாவில் டி20 தொடருக்கான தலைமை பயிற்சியாளராக ரோஞ்சி பொறுப்பேற்பார் என்றும், அதற்கான அணி ஜனவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. ரோஞ்சிக்கு முன்னாள் நியூசிலாந்து மகளிர் பயிற்சியாளர் பாப் கார்ட்டர் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் வைஸ்மேன் ஆகியோர் உதவ இருக்கின்றனர். 


இதையடுத்து, இந்திய சுற்றுப்பயணத்திற்கான அணியில் வில்லியம்சன் மற்றும் சவுத்திக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்க் சாப்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும், நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹென்றி ஷிப்லி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தனது முதல் அழைப்பை பெற்றுள்ளார். 


இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து அணி:


டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் இஷ் சோதி.


பாகிஸ்தான் அணிக்கு எதிரான நியூசிலாந்து அணி:


கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி