இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள்  குவித்து உலகசாதனை படைத்துள்ளது. 


பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி பாகிஸ்தான் ரவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி  களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அடித்து ஆடியது. ரவல்பிண்டியில் நடப்பது டெஸ்ட் போட்டியா இல்லை ஒருநாள் போட்டியா என கேள்வி கேட்கும் அளவிற்கு போட்டி நடந்தது. 


பாகிஸ்தான் அணி வீரர்கள் வீசிய அனைத்து பந்துகளையும், மைதானத்தின் அனைத்து பக்கமும் பறக்கவிட்டனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை துவம்சம் செய்து நொறுக்கினர். போட்டியின் 36வது ஓவரில் இங்கிலாந்து அணி 233 ரன்களில் இருந்த போது, முதல் விக்கெட் விழுந்தது. விக்கெட் விழுந்ததும் அப்பாடா என்று பெருமூச்சு விட்ட பாகிஸ்தானுக்கு, அடுத்தடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்களும் பாகிஸ்தானை சிதைத்துவிட்டனர். 






முதல் நாள் போட்டி முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது. உலக அளவில் இதுதான் தற்போது முதல் நாளில் குவிக்கப்பட்ட ரன்களில் அதிகபட்சமாக இருக்கிறது.  112 வருட ஆஸ்திரேலிய அணியின் உலக சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது. இதற்கு முன்னர், 1910 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணியை துவம்சம் செய்துள்ளது. அந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் குவித்தது தான் சாதனையாக இருந்தது. அதுவும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா போட்டியானது ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


ஆனால், பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இன்று மிகவும் மோசமான நாள் என்றுதான் கூறவேண்டும். இங்கிலாந்து அணி சார்பில் களமிறங்கிய க்ராவ்லே, பென் டக்கெட், போப், புரூக் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். முதல் நாளின் 75 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது. மேலும், புரூக் மற்றும் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களத்தில் உள்ளனர். இன்று மட்டும் இங்கிலாந்து அணியின் சார்பில், 73 ஃபோர்களும், மூன்று சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. 






பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில், ஜஹித் முகமூத் வீசிய 23 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 160 ரன்கள் குவித்து சிதைத்துள்ளனர்.