ஆசிய கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆசிய கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன. இந்த நிலையில், ஷார்ஜா மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.




இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் இரு நாட்டு ரசிகர்களும் குவிந்திருந்தனர். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 130 ரன்கள் இலக்கை நோக்கி சேஸ் செய்த பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ஆத்திரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகியது. இந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர்.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆப்கானிஸ்தான் எப்போதும் மதிப்புகளை மிகச்சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே கிரிக்கெட்டை ஜென்டில்மேன் ஆட்டமாகவே பார்க்கிறது. அதேபோல, மற்றவர்களும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் மதித்து நாடுகளிடையே அன்பையும், பக்தியையும் பரப்ப முயற்சிப்பார்கள் என்று நம்புகிறோம்.










நல்லிணக்கம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான உறவுகளின் ஒரு நிகழ்வாக கிரிக்கெட் கருதப்படுகிறது. சகோதரத்துவத்தை மேலும் நெருக்கமாக்குவதற்கு கிரிக்கெட் மூலம் ஒன்றிணைந்து செயல்படுவோம். மைதானத்தில் எதிர்மறை உணர்ச்சிகளை காட்டவும், நட்பு சூழ்நிலையை வன்முறையாக மாற்றவும் கிரிக்கெட் அனுமதிக்காது என்று பதிவிட்டுள்ளனர்.


ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி.க்கு கடிதம் எழுத உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராசா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.