நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி கைர்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து மோசமான பார்மில் தவித்து வரும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டேவிட் வார்னர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார், பின்னர், ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார்.
இளம்வீரர் லபுசாக்னே 5 ரன்களில் அவுட்டாக, அதிரடி ஆல்ரவுண்டர் ஸ்டோய்னிஸ் டக் அவுட்டானார். நியூசிலாந்து அணியினர் பந்துவீச்சில் தொடர்ந்து மிரட்டியதால் ஆஸ்திரேலிய வீரர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 12 ரன்களிலும் வெளியேற ஸ்டீவ் ஸ்மித்திற்கு மேக்ஸ்வெல் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இணைந்து ஆஸ்திரேலியாவை 100 ரன்களை கடக்க வைத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். அவர் 94 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசிய நிலையில் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. போல்ட் 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சில் கட்டிப்போட்டனர். மார்டின் கப்தில் 2 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே 5 ரன்களில் அவுட்டானார். கேப்டன் வில்லியம்சனுக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளிக்க யாருமே இல்லாத சூழலில் நியசிலாந்து அணியின் பேட்டிங் இருந்தது. விக்கெட் கீப்பர் டாம் லாதம் டக் அவுட்டானார்.
ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா சுழலில் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு அளித்த மிட்செல் ஜம்பா சுழலில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. களத்தில் இருந்த வில்லியம்சனும் 58 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் சான்ட்னர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் 16 ரன்களை எடுத்தார். கடைசியில் நியூசிலாந்து அணி 33 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆடம் ஜம்பா 9 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்பாட், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.