ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை துபாய் மைதானத்தில் இன்று நேருக்கு நேர் சந்திக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய கேப்டன் ரோகித்சர்மா இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். 






இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய உள்ள இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உலககோப்பை டி20க்கான அணியில் முக்கிய வீரராக கணிக்கப்படும் ரோகித்சர்மா, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக அக்‌ஷர் படேல், தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.






இந்திய அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தீபக்ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக்சாஹர், அர்ஷ்தீப்சிங் இடம்பெற்றுள்ளனர். கடந்த போட்டிகளில் இந்திய அணி இரண்டாவதாக பந்துவீசும்போது மிகவும் தடுமாறியது. இதனால், இன்றைய போட்டியில் பந்துவீச்சில் இந்திய அணி மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்,






டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி உற்சாகத்துடன் ஆட்டத்தை தொடங்கும். அந்த அணியில் கேப்டன் முகமது நபி தலைமையில், ஷசாய், குர்பாஸ், ஜட்ரான், ஜனத், நஜிபுல்லா, ரஷீத்கான், ஓமர்ஷாய், மாலிக், முஜிப் உர் ரஹ்மான், பரூக்கி ஆகியோர் களமிறங்குகின்றனர். ரோகித்சர்மா இல்லாததால் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுலுடன் யார் போட்டியை தொடங்குவார்கள்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஆப்கானிஸ்தான் இந்த தொடர் முழுவதும் பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளிக்குமா? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.  


மேலும் படிக்க : IND vs AFG, Asia Cup LIVE: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்...! முதலில் பேட் செய்யும் இந்தியா...!