உலகின் வலுவான அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. வலுவான அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் அணிகளில் முதன்மையானதாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்த இரு அணிகளும் இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது.


ஹம்பந்தோட்டாவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலே பகர் ஜமான் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டாக விக்கெட் கீப்பர் ரிஸ்வான் – இமாம் உல் ஹக் ஜோடி நிதானமாக ஆடியது.


இமாம் அரைசதம்:


நிதானமாக ஆடிய ரிஸ்வான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சல்மான் 7 ரன்களுக்கு அவுட்டானார். 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இப்திகார் அகமது இமாம் உல் ஹக்கிற்கு ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் அரைசதம் விளாசினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த இப்திகார் 30 ரன்களில் அவுட்டாக, சிறிது நேரத்தில் இமாம் உல் ஹக் அவுட்டானார். அவர் 94 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்தார்.




சிறப்பாக ஆடிய ஷதாப்கான் 39 ரன்களுக்கு ரன் அவுட்டாக 47.1 ஓவர்களில் பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஜீப் 3 விக்கெட்டுகளையும், நபி, ரஷீத்கான் தலா 2 விக்கெட்டுகளையும், ரஹ்மத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நிதானமாக ஆட முயற்சித்தது.


மிரட்டிய பாகிஸ்தான்:


மைதானம் பந்துவீச்சிற்கு நன்றாக ஒத்துழைத்ததால் ஷாகின் அப்ரீடி – நசீம் ஷா தொடக்கத்தில் மிரட்டினர். தொடக்க வீரர் இப்ராகிம் ஜட்ரான் டக் அவுட்டாக அடுத்து வந்த ரஹ்மத் ஷாவும் டக் அவுட்டானார். கேப்டன் ஷாகிதி டக் அவுட்டாக 4 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தான் இழந்தது.


குர்பாஸ் – அலிகில் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணியை ஹாரிஷ் ராஃப் சீர்குலைத்தார். அவரது பந்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. அலிகில் 4 ரன்களில் அவுட்டாக முன்னாள் கேப்டன் முகமது நபி களமிறங்கினார். நிதானமாக ஆடிய குர்பாஸ் 47 ரன்களில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் பந்தில் அவுட்டானார்.




அடுத்து வந்த ஓமர்ஷாய் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் 12 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அடுத்து முகமது நபி 7 ரன்களில் அவுட்டாக, ரஷீத்கான் வந்த வேகத்தில் போல்டானார். இறுதியில் வெறும் 19.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து மிக மோசமான தோல்வியை தழுவியது.


இதனால், பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், நசீம்ஷா மற்றும் ஷதாப்கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 1-0 என்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.