கிரிக்கெட் விளையாட்டு என்பது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்களால் விளையாடப்படும், விரும்பப்படும் மற்றும் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அப்படியான கிரிக்கெட்டில் அவ்வப்போது யாருமே நம்பமுடியாத சில அசாத்திய நிகழ்வுகளும் நடைபெறும். சில சாதனைகளை ஒருவர் படைக்கும்போது இந்த சாதனை இவரைத் தவிர இனி யாரலும் படைக்க முடியாது என பலரும் வியப்புடன் கூறுவார்கள். கிரிக்கெட் ரசிகர்களும் அதனை நம்புவார்கள். சில சாதனைகள் எல்லாம் முறியடிக்கவே முடியாது என கூறுவார்கள்.


உதாரணத்திற்கு இந்திய அணியின் யுவராஜ் சிங் விளாசிய 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர். ஆனால் இதனை பொல்லார்ட் சமன் செய்தார். அதேபோல் ஒருநாள் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் விளாசிய 200 ரன்கள் யாராலும் எட்ட முடியாது என பேசப்படபோது அவரைத் தொடர்ந்து பலர் 200 ரன்களை எட்டிவிட்டனர். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மூன்று முறை 200 ரன்களை எட்டிவிட்டார். தற்போது ஒருநாள் தொடரில் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக ரோகித் சர்மாவின் 264 ரன்கள்தான் உள்ளது. இதனை முறியடிக்க முடியாது என பலர் கூறியுள்ளனர். ஆனால் இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கபடும் அளவிற்கு நாளுக்கு நாள் மிகத் திறமையாக கிரிக்கெட் விளையாட தங்களை வீரர்கள் தயார்படுத்திக்கொண்டுள்ளனர். 






இவ்வரிசையில் இங்கிலாந்தில் இதுவரை யாராலும் படைக்கப்படாத சாதனையாக ஒரு நிகழ்வுதான் தற்போது நடைபெற்றுள்ளது.


அதாவது, குக்ஹிலுக்கு எதிராக ப்ரோம்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்புக்காக பந்துவீசும்போது, ​ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை படைத்துள்ளார். 12 வயதான ஜூனியர் வீரர் ஆலிவர்  இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வேறு யாரும் படைத்ததில்லை. கிரிக்கெட் உலகில் தற்போது ஆலிவரின் சாதனைதான் பேசு பொருளாகியுள்ளது. 


தனது சாதனை குறித்து ஆலிவர் கூறுகையில், இதனை என்னால் நம்பவே முடியவில்லை, முதல் பந்தை வீசும் போது அது வைடாக போகப்போகிறது என நினைத்தேன்” என கூறியுள்ளார். 


ஆலிவரின் பெற்றோர் கூறுகையில், ஆலிவர் எப்படி இந்த சாதனையை படைத்தார் என தெரிவில்லை. மகிழ்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது என கூறியுள்ளனர். 


இதற்கு முன்னர் ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அதில், ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் கைப்பற்றப்பட்டதால், 5 விக்கெட்டுகள் மட்டும் பந்து வீச்சாளரின் கணக்கில் சேர்ந்தது. ஆனால் இந்த போட்டியில் பந்து வீச்சாளர் ஆலிவர் ஆறு விக்கெட்டுகளை அதாவது டபுள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.