இந்திய கிரிக்கெட் அணி 2008ஆம் ஆண்டு இதே நாளில் இரண்டாவது முறையாக யு-19 உலகக் கோப்பை தொடரை வென்றது. விராட் கோலி தலைமையிலான அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, மணிஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்று இருந்தனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய அனைத்து குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. இறுதிப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் தடுமாறியது. விராட் கோலி மற்றும் கோசாமி ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சவுரப் திவாரி மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக அமைந்தனர். 45.4 ஓவர்களில் இந்திய அணி 159 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு டிஎல் முறைப்படி புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 25 ஓவர்களில் 116 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச தொடங்கினர். தொடக்க முதலே தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் தென்னப்பிரிக்க அணியின் கேப்டன் பார்னல் மற்றும் ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இருப்பினும் ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் சிறப்பாக பந்துவீசி இந்த இருவரின் விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இரண்டாவது முறையாக யு-19 உலகக் கோப்பையை வென்றது. இந்தத் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி இடம்பிடித்தார். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் இந்த அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் இடம்பிடித்தனர். இந்திய அணி இதுவரை 2000,2008,2012,2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 5 முறை யு-19 உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி - கங்குலி அறிவிப்பு