ஒரு நாட்டை உலகளவில் அங்கீகரிக்க விளையாட்டு என்பது மிகவும் இன்றியமையாதது. இந்தியாவிற்கு உலகளவில் அப்படிப்பட்ட ஒரு அங்கீகாரத்தை, உலக நாடுகளின் பார்வையை திருப்பியதில் கிரிக்கெட்டின் பங்கும் தவிர்க்க முடியாதது. உலகின் ஜாம்பவான் அணிகளுக்கு எல்லாம் இன்று கண்களில் விரல் விட்டும் அணியாக இந்திய கிரிக்கெட் அணி வளர்ந்து நிற்கிறது என்றால் அந்த ஆலமரத்திற்கான விதை போடப்பட்ட நாள் இன்றுதான். ஆம். சரியாக 39 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் உலகக்கோப்பையை உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கைப்பற்றி கோப்பையை வென்ற நாள் இது.


1983ம் ஆண்டு உலககோப்பையை இந்தியாதான் வெல்லும் என்று அன்று கூறியிருந்தால், நிச்சயம் இந்தியாவில் உள்ள அனைவரும் சிரித்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. உலககோப்பைக்காக ஆடச்சென்ற இந்திய அணியினரின் மன நிலையும் அப்படிப்பட்டது என்பதே உண்மை. அதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே வென்றிருந்த இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.





அன்றைய காலகட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ரிச்சர்ட்ஸ், லாயிட்ஸ், கிரினீட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரை கொண்ட பலமிகுந்த மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்றே கிரிக்கெட் நிபுணர்கள், வல்லுனர்கள் கணித்தனர். ஆனால், யஷ்பால் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 262 ரன்கள் குவித்தது.


ரோஜர்பின்னி, ரவிசாஸ்திரியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் நிபுணர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் திகைத்துப்போனார்கள். ஆனாலும், இங்கிலாந்து ஊடகங்கள் அதிர்ஷ்டத்தில் இந்தியா வென்றதாக எழுதியது. அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும், 4வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடமும் படுதோல்வியடைந்தது.





பின்னர், கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா களமிறங்கிய போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை கேப்டன் இன்னிங்ஸ் ஆடி 175 ரன்கள் குவித்த கபில்தேவ் வெற்றி பெற  வைத்து அரையிறுதிக்கு தகுதி பெற வைத்தார். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியதை அனைத்து ஜாம்பவான் அணிகளும் ஆச்சரியமாகவே பார்த்தனர்.


இந்தியா அரையிறுதியில் எப்படியும் தோற்றுவிடும் என்று எழுதிய இங்கிலாந்து ஊடகங்களுக்கு, இங்கிலாந்து அடித்த 213 ரன்களை  எட்டிப்படித்து தக்க பதிலடி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. மீண்டும் லீக் போட்டிகளில் மோதிக்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியும், இந்தியாவும் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதியது.




உலககோப்பையை வென்று மேற்கிந்திய தீவுகள் அணி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றே அனைவரும் கருதினர். அசுர பலம் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது. சுனில் கவாஸ்கர் 2 ரன்களில் அவுட்டாக அமர்நாத்தும், ஸ்ரீகாந்தும் பொறுப்புடன் ஆடினர். ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடினர். அவர் பவுண்டரிகளாகவே விளாசினார்.


57 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 38 ரன்கள் அடித்த ஸ்ரீகாந்த் அவுட்டான பிறகு அமர்நாத்தும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷ்பால் சர்மா 11 ரன்களிலும், சந்தீப் பட்டீல் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் கபில்தேவ்  களமிறங்கியது முதல் அதிரடியாக ஆட முயற்சித்தார். அவர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் விளாசிய நிலையில் 8 பந்துகளில் 15 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களில் ஆட்டமிழந்தது.




184 ரன்கள் என்ற இலக்கை மிகவும் எளிதாக மேற்கிந்திய தீவுகள் எட்டிப்பிடிக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், போராடும் குணம் என்றால் என்ன? இறுதிவரை போராட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டாக கிரினீட்ஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய ரிச்சர்ட்ஸ் அடித்து ஆடினார்.


அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ஹெய்ன்சை மதன்லால் அவுட்டாக்கினார். தலைசிறந்த பேட்ஸமேனும், இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த விவ் ரிச்சர்ட்சை மதன்லால் காலி செய்தார். ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கபில்தேவ் பின்னோக்கி ஓடிச்சென்று கேட்ச் பிடித்தது அந்த ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அவர் 28 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 33 ரன்களில் வெளியேறினார். ரிச்சர்ட்ஸ் ஆட்டமிழந்த பிறகு லேரி கோம்ஸ், கேப்டன் கிளைவ் லாயிட்ஸ், பாச்சஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிககை அளிக்கும் விதமாக ஜெப் டுஜோனும், மால்கம் மார்ஷலும் ஆடினர்.




இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த ஜோடியை மொகிந்தர் அமர்நாத் பிரித்தார். அவர் பந்தில் ஜெப்டுஜோன் 25 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு மால்கம் மார்ஷல் 18 ரன்களில் அமர்நாத் பந்திலே அவுட்டானார்.  கடைசி விக்கெட்டான ஹோல்டிங்கையும் அமர்நாத் வெளியேற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 140 ரன்களுக்கு சுருண்டது.


கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலககோப்பையை முத்தமிட்டது. அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி என்று எழுதிய ஊடகங்கள் இந்தியாவின் அபார திறமையை பாராட்டி எழுதினர். இந்தியாவை அடக்க ஆண்ட இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் முழுவதும் இந்திய  கொடி கம்பீரமாக பறந்தது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண