கடந்த 2014ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 21) லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் வெற்றிபெற்று 28 ஆண்டு கால வரலாற்றை இந்திய அணி உடைத்து புதிய சாதனை படைத்தது. கடந்த 2014ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற வேண்டும் என வெறியுடன் களமிறங்கியது. இதற்கு முன் கடந்த 1986ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கெத்து காட்டியது. இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் இஷாந்த் சர்மாவின் பங்கு மறக்க முடியாதது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 74 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது சிறப்பான பங்களிப்பிற்கு அந்த போட்டியில் அவருக்கு ‘மேன் ஆப் தி மேட்ச்’விருது வழங்கப்பட்டது.
போட்டி சுருக்கம்:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 295 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஜிங்க்யா ரஹானே 15 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்தார். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் கேரி பேலன்ஸ் 15 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் குவித்தார். லியாம் பிளங்கட் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 82 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து, இரண்டு இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 342 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்தியா சார்பில் இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய் 11 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்தார். இது தவிர, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 68 ரன்களும், புவனேஷ்வர் குமார் 52 ரன்களும் எடுத்தனர். ஜடேஜா தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளையும், புவனேஷ்வர் குமார் 8 பவுண்டரிகளையும் அடித்தனர்.
319 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசி 74 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.