பிப்ரவரி 24ம் தேதி இந்திய கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத மிகவும் சிறப்பான நாள். 14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2010ம் ஆண்டு இதே நாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் அடுத்த கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய சாதனை படைத்தார்.
இந்த நாளில் என்ன நடந்தது..?
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக குவாலியரில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். இதுதான் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் இரட்டை சதமாகும்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஒருநாள் போட்டியில் கடந்த 1971ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. அப்படிப்பட்ட நிலையில், 39 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 200 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
சச்சின் டெண்டுல்கருக்கு முன், ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவெண்ட்ரி மற்றும் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் போன்ற வீரர்கள் மட்டுமே இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. சச்சினின் இரட்டை சதத்திற்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் பல வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர், அந்நாட்டு பந்துவீச்சாளர்களின் பந்தை திறம்பட எதிர்கொண்டார். 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவெண்ட்ரியின் 194 ரன்களை முறியடித்தார் சச்சின்.
சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்திருந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், இந்திய அனி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இதே நாளில் இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெயில்:
பிப்ரவரி 24ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லுக்கும் மறக்க முடியாத நாள். இதே நாளில் இவரும் இரட்டை சதம் அடித்தார். 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கெய்ல் இந்த சாதனையை நிகழ்த்தினார். கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கெயில் 147 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 215 ரன்கள் குவித்தார்.
இதுவரை 10 பேட்ஸ்மேன்கள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர். இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் சமீபத்தில் பதும் நிசாங்க (இலங்கை), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஃபகார் ஜமான் (பாகிஸ்தான்), மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இந்த இடத்தை எட்டியுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்:
200 * சச்சின் டெண்டுல்கர், 2010
219 வீரேந்திர சேவாக், 2011
209 ரோஹித் சர்மா, 2013
264 ரோஹித் சர்மா, 2014
215 கிறிஸ் கெய்ல், 2015
237 மார்டின் கப்தில், 2015
208* ரோஹித் சர்மா, 2017
210* ஃபகார் ஜமான், 2018
210 இஷான் கிஷன், 2022
208 சுப்மன் கில், 2023
201* க்ளென் மேக்ஸ்வெல், 2023
210* பதும் நிசாங்க, 2024
சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
50 வயதான சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் 34 ஆயிரத்து 357 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இந்த காலகட்டத்தில் சச்சின் 100 சதங்களும், 164 அரை சதங்களும் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக மொத்தம் ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றார்.
- 2011 உலகக் கோப்பை சச்சினுக்கு மிகவும் மறக்கமுடியாதது, அங்கு தோனி தலைமையிலான இந்திய அணி பட்டத்தை வென்றது.
- சச்சின் டெண்டுல்கர் நவம்பர் 2013 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.