கடந்த சில ஆண்டுகளாகவே, 16 வயது டீன் ஏஜ் முதல் 40 வயது இளைஞர்கள் வரை திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது வருவது போன்ற செய்திகள் அடிக்கடி நாம் கேள்வி பட்டு வருகிறோம். அதிலும், குறிப்பாக, 18 வயதிலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த மாரடைப்பால் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு என்னதான் காரணம்? என தெரியாமல் இன்றைய கால இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர். 


அதேபோல், சமீப காலமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது, நடைபயிற்சியின்போது இளைஞர்கள் சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் தந்தது. அந்த வடு மாறுவதற்குள் அடுத்த சில நாட்களில் அடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


கர்நாடக கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு: 


கர்நாடக கிரிக்கெட் வீரர் கே ஹொய்சாலா மாரடைப்பால் மரணம் அடைந்தார். களத்தில் வெற்றியை கொண்டாடும் போது, ​​கே ஹொய்சலாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் பிறகு நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஏஜிஸ் தென் மண்டல போட்டியின் ஒரு போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 


இப்போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே பெங்களூரு ஆர்எஸ்ஐ கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்தது. போட்டியில் கர்நாடகா வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ஹொய்சலா, கடுமையான நெஞ்சுவலி காரணமாக மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


சிகிச்சை அளித்தும் பலனில்லை:


34 வயதான ஹொய்சாலா ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்ததாக ஹொய்சாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வியாழன் அன்று நடந்தது என்றும் அதன் தகவல் பிப்ரவரி 23 ஆம் தேதி மாலைதான் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் தெரிகிறது. 


கே ஹொய்சலா ஒரு ஆல்-ரவுண்டராக அறியப்படுகிறார். இவர் ஒரு மிடில் ஆர்டரில் பேட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர். ஹொய்சாலா 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார். இது தவிர கர்நாடக பிரீமியர் லீக்கிலும் விளையாடினார்.  


பௌரிங் மருத்துவமனையின் டீன் டாக்டர் மனோஜ் குமார் கூறுகையில், "ஹொய்சலா இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்" என்று தெரிவித்தார். 


கிரிக்கெட் வீரரின் மறைவுக்கு கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சமூக ஊடகங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்"ஏஜிஸ் தென் மண்டல போட்டியின் போது விளையாடி வந்த கர்நாடகாவின் கிரிக்கெட் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஹொய்சாலாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த சோகத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. இதன்மூலம், இறப்பு என்பது சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என தெரிவித்தார்.