கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்ஸ் அடித்து சாதனை நிகழ்த்திய நாள் இன்று. 


1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியான இதே நாளில் சர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் அடித்து கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சாதனையை படைத்தார். 


தற்போதைய காலகட்டத்தில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் பவுண்டரிகள் அடிப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்கள் திறமையை வெளி கொணர்வது இல்லை என்ற விமர்சனமும் உண்டு. அதேபோல் பேட்ஸ்மேன்களும் சிக்ஸ் அடிக்க பெரிதாக சிரமப்படுவதில்லை. 


ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக 1968 ஆம் ஆண்டிலேயே ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் என்றால் நினைத்து பார்க்க முடிகிறதா? என்னதான் தற்போது உள்ள நடிகர்கள் சிவாஜி போல் நடித்தாலும் சிவாஜி நடிப்பு ஏன் நிலைத்து நிற்கிறது என்றால் அவர் ஃபீல்டில் தனித்திறமையை வெளிப்படுத்தியதே என்றே சொல்லலாம். அதேபோல் தான் கிரிக்கெட் சரித்திரத்தில் சர்  கார்பீல்ட் சோபர்ஸ் தனக்கே உரிய திறமையை நிரூபித்திருக்கிறார். 


மேற்கிந்திய தீவுகள் அணியின் லெஜெண்ட் சர் கார்பீல்ட் சோபர்ஸ் நோட்டிங்கம்ஷர் அணியின் சார்பாக கிளாமோர்கன் அணிக்கு எதிராக விளையாடிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார். 



நோட்டிங்கம்ஷர் அணி 5விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. அப்போதுதான் கரீபியன் சிங்கம் சர் கார்பீல்ட் சோபர்ஸ் களம் இறங்கினார். சிக்ஸர்களை பறக்கவிட்டு விரைவில் அதிரடி 40 ரன்களை எடுத்தார். அந்த ஓவரை மால்காம் நாஷ் என்பவர் வீசினார். இறுதியில் நோட்டிங்கம்ஷர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்திருந்தது. 


இதன்பின்னர்தான் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனைகளை குவிக்கத்தொடங்கினர் என சொல்லலாம். அந்த வரிசையில் 1985ஆம் ஆண்டு ராஞ்சி டிராபியில் ரவி சாஸ்திரி அந்த சாதனையை படைத்தார். அதேபோல், 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் ஹெர்செல் கிப்ஸும், 2007 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் யுவராஜ் சிங்கும், ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்தனர்.