இங்கிலாந்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜோ ரூட், பத்தாண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்கள் மட்டும் 16 சதம் விளாசி இருக்கிறார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஜோ ரூட்  12,274 ரன்களை குவித்துள்ளார். 


சச்சின் சாதனையை முறியடிப்பாரா?


டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 15,921 ரன்களை குவித்துள்ளார். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கிப்பாண்டிங்க் 13,378 ரன்களுடன் இருக்கிறார்.


அதேபோல், காலீஸ் 13,289 ரன்களும்,ராகுல் டிராவிட் 13,288 ரன்களும்,அலேஸ்டர் கோக் 12,472 ரன்களும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்காகரா 12,400 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் சச்சின் டெண்டுல்கர் சாதனை முறியடிக்கப் போகும் வீரர் ஜோ ரூட் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.






ஜோ ரூட் 264 இன்னிங்ஸ்கள் விளையாடி அதில் 12,274 ரன்கள் எடுத்துள்ளார். அந்தவகையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிக்க இன்னும் 3,647  ரன்கள் தேவை படுகிறது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் ஜோ ரூட் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தன் மூலம் தான் அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடிகிறது என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.