உலகக் கோப்பை 2023 போட்டியானது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதன்மூலம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பையை இந்திய அணியின் கைகளில் காண இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
2027 உலகக் கோப்பை:
இந்தநிலையில், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இதன்மூலம் மூன்று நாடுகள் இணைந்து அடுத்த உலகக் கோப்பையை நடத்தும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2003 உலகக் கோப்பை போட்டியானது ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து போட்டியை நடத்தியது. அந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் லீக் ஸ்டேஜிலிருந்து வெளியேறிய நிலையில், கென்யா அணி மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரையிறுதி வரை சென்றது. அரையிறுதியில் இந்திய அணியிடம் கென்யா தோல்வியை சந்திக்க நேரிட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்கு மறக்க முடியாதது. 1983-க்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போதும் இந்தியா அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது.
எந்தெந்த அணிகள் தகுதி..?
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே 2027 உலகக் கோப்பையை விளையாடுவது உறுதியான நிலையில், போட்டியை நடத்தும் நமீபியா உலகக் கோப்பை தகுதிசுற்று சுற்று போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியும்.
எத்தனை அணிகள் பங்கேற்கும்..?
அடுத்த உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கும். இதில் இரண்டு அணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நேரடியாக தகுதிபெறுவார்கள். மீதமுள்ள நான்கு அணிகளும் தகுதிச் சுற்று போட்டிகள் மூலம் உலகக் கோப்பை 2027ல் அடியெடுத்து வைக்கும்.
2027 உலகக் கோப்பையில் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இங்கு ரவுண்ட் ராபின் கட்டத்திற்குப் பிறகு, இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அதாவது இரண்டாவது சுற்றில் 6 அணிகள் இருக்கும். ஒரு குழுவின் அணி மற்ற குழுவின் அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதன்படி, இந்த சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் ஐந்து போட்டிகள் இருக்கும். இந்த நிலையில் இரண்டு அணிகள் வெளியேற்றப்பட்டு பின்னர் அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.