2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. 


இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகும் வகையில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சரியாக 21 மாதங்களுக்கு பிறகு தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 கடைசியாக இந்திய அணிக்காக ரவிசந்திரன் அஸ்வின் 21 மாதங்களுக்கு முன்பு விளையாடினார். கடைசியாக அஸ்வின், கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கினார். அதன்பிறகு, அவ்வபோது இந்திய அணிக்கான டி20 போட்டியில் மட்டும் இடம்பெற்று உள்ளே வருவதும், வெளியே போவதுமாக இருந்தார்.  கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு பிறகு அவர் இடம் கேள்விகுறியானது. ரவிசந்திரன் அஸ்வின் கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக மொத்தம் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த ஆட்டமாகும். இது தவிர, ரவி அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 86.96 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 16.44 சராசரியுடன் 707 ரன்கள் எடுத்துள்ளார். ரவிசந்திரன் அஸ்வின் 2015 உலகக் கோப்பை அணியிலும், 2022 டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்று இருந்தார். கடந்த 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அஸ்வின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு கோப்பையை வென்ற அணியில் விராட் கோலி மட்டுமே 2023 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அஸ்வின் வருகின்ற 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அஸ்வினுக்கு உலகக் கோப்பை அணியில் நுழைவது அவ்வளவு எளிதாக இருக்காது. உலகக் கோப்பை அணியில் நுழைய, ரவி அஸ்வின் ஆஸ்திரேலியா தொடரில் வலுவாக செயல்பட வேண்டும். இதற்கு முன் இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்திய ஆசிய கோப்பை அணியில் ரவி அஸ்வின் இடம்பெறவில்லை.


2010ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அஸ்வின், 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2013ல் வென்ற சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் இடம்பிடித்திருந்தார். 


அஸ்வின்:


அஸ்வின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான காத்திருப்பு வீரராக உள்ளார்.


முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:


கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா


மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்