வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்திய அணி ஒருமாதம் காலம் ஓய்வில் இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஒரு மாதம் காலம் விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என மீண்டும் பிஸியாக இருக்கும். 


ஒருநாள் உலகக் கோப்பையை தொடரை கருத்தில்கொண்டு இந்திய அணி அதிகளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்த்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. மேலும், ஒருநாள் கோப்பைக்கு முன்னதாகவே இந்திய அணி அதிகபட்சமாகவே 10 முதல் 11 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாட இருக்கிறது. 


இந்திய அணிக்கு இருக்கும் சிக்கல்கள்..!


இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பல தொடர்களில் விளையாடவில்லை. காயத்தினால் அவதிப்பட்டு வரும் கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் ஆகஸ்ட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத இந்திய அணி:


சமீபகால இந்திய அணியில் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுபவர்களில் சிராஜ் ஒருவரே இருக்கிறார். கடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், இதுவரை 24 போட்டிகளில் 43 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 2ம் இடத்திலும் உள்ளார். 


தற்போது, சிராஜுக்கு பிறகு இந்திய அணியில் யார் அடுத்த பந்துவீச்சாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 27வது இடத்தில் உள்ள பும்ரா, 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்காக வெறும் 14 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 


அதேபோல், மற்றொரு நம்பிக்கைகுரிய பந்துவீச்சாளராக முகமது ஷமி இருந்தாலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு 23 போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டும் முழுமையாக 10 ஓவர்களை வீசியுள்ளார். 


இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டி தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முகமது சிராஜுக்கு பிறகு நிலைத்து நின்று பந்துவீச வேகப்பந்து வீச்சாளர்களே இல்லை. இதையடுத்து, ஒருநாள் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கும் அணி எப்படி என்பது தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 


வருகின்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 


வெஸ்ட் இண்டீஸ் எதிரான இந்திய அணியின் போட்டி அட்டவணை: 


டெஸ்ட் தொடர்


முதல் போட்டி - ஜூலை 12, புதன் முதல் ஜூலை 16 வரை, ஞாயிறு - வின்ட்சர் பார்க், ரோசோ, டொமினிகாவில். 
இரண்டாவது போட்டி - ஜூலை 20, வியாழன் முதல் ஜூலை 24 வரை, திங்கள் - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.


ஒரு நாள் தொடர்


முதல் போட்டி - வியாழன், ஜூலை 27 - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸில். 
இரண்டாவது போட்டி - ஜூலை 29, வெள்ளிக்கிழமை - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸில்.
மூன்றாவது போட்டி - ஆகஸ்ட் 1, செவ்வாய் - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.


டி20 தொடர்


முதல் போட்டி - ஆகஸ்ட் 4, வெள்ளிக்கிழமை - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.
இரண்டாவது போட்டி - ஆகஸ்ட் 6, ஞாயிறு - கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானம்
மூன்றாவது போட்டி - ஆகஸ்ட் 8, செவ்வாய் - கயானாவின் பிராவிடன்ஸ் மைதானம்
நான்காவது போட்டி - ஆகஸ்ட் 12, சனிக்கிழமை - புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானம்
ஐந்தாவது போட்டி - ஆகஸ்ட் 13, ஞாயிறு - புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானம்