கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 13 வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 5) இந்தியாவில் மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது.
இந்த போட்டிகள் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.
இந்த உலக்கோப்பை தொடரில் சர்வதேச அளவில் மிக சிறந்த பத்து அணிகள் விளையாடுகின்றன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் கோப்பையை கைப்பற்றும் துடிப்புடன் களம் காண இருக்கின்றன.
இதற்கு முன்பாக கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலும் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் சில வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருவது வழக்கம். அப்படி தங்களது திறமையை வெளிப்படுத்தும் வீரர்களின் பெயர் எப்போதும் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து இருக்கும்.
அப்படி, நாளை மறுநாள் தொடங்க இருக்கும் உலக்கோப்பை தொடருக்கு முன்னதாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குதுகலப்படுத்திய கவனிக்க வேண்டிய 5 வீரர்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
#5 பேட் கம்மின்ஸ்
30 வயதான பேட் கம்மின்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இரண்டு உலகக்கோப்பைகளில் விளையாடியுள்ளார். அதன்படி, 2015 ஆம் ஆண்டு 10 போட்டிகளும் , 2019 ஆம் ஆண்டு 12 உலக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அந்த தொடரில் இவர் மொத்தம் 19 விக்கெட்டுகளை தனது அசாதரண பந்துவீச்சின் மூலம் வீழ்த்தியுள்ளார். தற்போது இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த முறை உலகக்கோப்பையில் இவரது பந்து வீச்சை காண்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
#4 ரசித் கான்
ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் ரசித் கான். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமானவர்.
25 வயதே ஆன இவரின் பந்து வீச்சு பல்வேறு விதமான மாறுபாடுகளை கொண்டது. தனது வித்தியாசமான சுழல் பந்து மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டக்கூடியவர். இவர் உலக்கோப்பை போட்டிகளில் மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதில் 416 ரன்கள் விளாசி உள்ள ரசித் கான் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் மீதான ரசிகர்களின் பார்வை இன்னும் அதிகம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
#3 பாபர் அசாம்
பாகிஸ்தான் அணியின் வலது கை பேட்ஸ்மேனான பாபர் அசாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.
இவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமானவர். எட்டு உலக்கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ள 67.71 என்ற ஸ்ட்ரைட் ரேட் உடன் 474 ரன்களை குவித்துள்ளார். பல போட்டிகளில் மேட்ச்- வின்னிங்கை பாகிஸ்தான் அணிக்காக செய்துள்ளார். அதானல் தான் என்னவோ இவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
#2 டேவிட் வார்னர்
கடந்த 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கியமான வீரர்களில் இவரும் ஒருவர். 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் 18 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 992 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 178 ரன்கள் எடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பையில் மட்டும் 10 இன்னிங்சில் 71.88 என்ற சராசரியுடன் மொத்தம் 647 ரன்களை குவித்துள்ளார்.
இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2015 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#1 விராட் கோலி
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ’ரன் மிஷின்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படக்கூடிய இந்திய அணியின் வீரர் விராட் கோலி. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் சிறந்த வீரராக இருப்பவர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைகு எதிராக அறிமுகமானவர். உலக்கோப்பை தொடரில் தன்னுடைய திறமையை சரியாக கையாள்வதில் திறமைசாலி. உலக்கோப்பையில் 22 போட்டிகளில் 46.77 என்ற சராசரியுடன் 1029 ரன்களை குவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் இருந்ததால் அதிகம் விமர்சிக்கப்பட்ட இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் கண்டார். இதனிடையே, இந்த ஆண்டு நடைபெறும் உலக்கோப்பையில் ரசிகர்களுக்கு ரன் விருந்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.