உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் மாதம் 5ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 9 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் அனைத்து அணிகளும் வெற்றிக்கு மட்டும் இல்லாமல், ரன்ரேட்டினையும் மனதில் வைத்து பெரும் கூட்டுமுயற்சியுடன் விளையாடி வருகின்றது. 


ஆஸ்திரேலியா - இலங்கை:


இந்நிலையில் இன்று அதாவது, அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற அணி என்ற பெருமைக்குரிய நாடாக இருந்தாலு, இந்த தொடரில் தான் களமிறங்கிய இரண்டு போட்டிகளும் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணியும், அதிகப்படியான அறிமுக வீரர்களைக் கொண்ட இலங்கை அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி லக்னோவில் நடைபெற்றுவருகின்றது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம், இரு அணிகளும் இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பதுதான். 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இலங்கை அணியின் இன்னிங்ஸை குஷால் பெராரா மற்றும் பதும் நிசங்கா தொடங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதால், ஆஸ்திரேலிய அணியின் டாப் பவுலர்களால் எளிதில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இலங்கை அணியின் தொடக்க ஜோடி மிரட்டலாக ரன்கள் சேர்க்க அது இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 


சரிந்த இலங்கை:


இருவரும் இணைந்து இலங்கை அணியினை சிறப்பான நிலைக்கு உயர்த்தியது மட்டும் இல்லாமல், இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசினர். இவர்களின் ஆட்டத்தினை பார்த்தபோது இலங்கை அணி எளிதில் 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் தொடக்க விக்கெட்டினை ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றிக் கொடுக்க, அதன் பின்னர் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பு நடத்தியது போல் வருவதும் செல்வதுமாக இருந்தனர். இதனால் இலங்கை அணி 200 ரன்களை எட்டுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 


இறுதியில் இலங்கை அணி 43.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி சார்பில் குஷால் பெராரா 71 ரன்களும், பதும் நிசங்கா 68 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் அசலங்கா மட்டும் 25 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளும் சேர்த்தனர்.