உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இரண்டாவது நடக்கும் ஆட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. 


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்


2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. பயிற்சி ஆட்டங்களுக்குப் பின் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி லீக் போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் நாளில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 


இன்று 2 ஆட்டங்கள் 


3வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. 


அணிகளின் பலம்


இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் இறுதி ஆட்டத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களிலும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் மிக முக்கியமான போட்டித்தொடரில் களம் காண்கிறது. பேட்டிங்கில் ஓரளவு பலம் கொண்டுள்ள இலங்கை அணி பந்துவீச்சில் மிக முக்கியமானவர்கள் இல்லாததால் திணறி வருகிறது. 


தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக உள்ளது. அந்த அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் அந்த அணி களம் காண்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்கா அணி உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறையாவது வரலாற்றை மாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அந்த அணி களம் காண்கிறது. இதற்கு லீக் போட்டிகளில் இருந்தே வெற்றி பெற வேண்டும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 


மைதான நிலவரம் 


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே  டாஸ் வென்ற அணி ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து பெரும்பாலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பரிக்கா - இலங்கை அணிகள் இதுவரை  6 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதுவரை தென்னாப்பரிக்கா 4 முறையும், இலங்கை ஒரு முறையும்,  ஒருபோட்டி சமனில் போட்டி முடிவடைந்துள்ளது. 


இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் (உத்தேச விபரம்)


இலங்கை அணி: குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன


தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக்,  ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி




மேலும் படிக்க: PAK vs NED World Cup 2023: உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் பலப்பரீட்சை: வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்